அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டமை இலங்கையின் அரசியல் பாரம்பரியத்தை மாற்றியுள்ளது.
ஊடகவியலாளர்: மார்க்சிஸ்ட் ஜே.வி.பி கட்சியின் தலைவரிடம் இருந்து என்ன எதிர்பார்க்கலாம்?
சிறுபான்மையினர் அவரைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று அரசு சாரா தமிழ் நிறுவனமான பேர்ள் என்ற நிறுவனத்தின் சாஹித்யன் திலிப்குமார் தெளிவுபடுத்துகின்றார்.
கொழும்பில் செப்டம்பர் 23 அன்று நடைபெற்ற பதவியேற்பு விழாவில் அனுரகுமார திசாநாயக்க.
ஊடகவியலாளர் : சாஹித்யன் திலிப்குமார், சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்னர் இலங்கை வாக்காளர்கள் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுத்தனர். யாருக்கு வாக்களித்தீர்கள்?
சாஹித்யன் திலிப்குமார்: யாருக்கும் இல்லை, எனக்கு வாக்குரிமை இல்லை. நானும் எனது குடும்பமும் சுவிட்சர்லாந்தில் குடியுரிமை பெற்றபோது, சுவிட்சர்லாந்தில் உள்ள பல தமிழர்களைப் போலவே நாமும் இலங்கை குடியுரிமையை இழந்தோம். இரட்டை குடியுரிமை சாத்தியமாகும், ஆனால் அது நீண்ட அரச நிறுவாக தடைகளை உள்ளடக்கியது. மேலும் நான் என்னை ஒரு இலங்கையன் என்று அடையாளப்படுத்தவில்லை, ஆனால் ஒரு தமிழன் என்றே என்னை அடையாளப்படுத்திக்கொள்கின்றேன்.
எனினும், இலங்கையில் நடந்த சம்பவங்களை நீங்கள் கவனிக்கின்றீர்களா?
ஆம், மிகவும் தீவிரமாக கவனிக்கின்றேன், ஏனென்றால் இந்தத் தேர்தல் பிரச்சாரம் பல வழிகளில் மாறுபட்டதாக அமைந்தது, இதற்கு முன்பு இவ்வளவு வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட்டதில்லை, மேலும் தேர்தல் முடிவு இவ்வளவு எதிர்பாராததாக இருந்ததில்லை. முடிவுகள் மிகவும் கடுமையான போட்டித்தன்மையை வெளிப்படுத்தியது.
ஜனாதிபதி வேட்பாளர்கள் எவரும் ஐம்பது சதவீத வாக்குகளைப் பெறவில்லை, வழக்கமாக நிகழ்வது போல் – பின்னர், முதல் முறையாக, ஒரு இடதுசாரி வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.
ஊடகவியலாளர்: தேர்தலில் வெற்றி பெற்ற சிங்கள பெரும்பான்மை மக்களைச் சேர்ந்த அனுரகுமார திசாநாயக்க, 2019 தேர்தலுடன் ஒப்பிடுகையில் நம்பமுடியாத அதிகரிப்பை – வெறும் 4 முதல் 42 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளார். அது எப்படி சாத்தியமானது?
இலங்கை என்றும் காணாத மோசமான பொருளாதார நெருக்கடியின் பின்னணியில்தான் திஸாநாயக்கவின் வெற்றியை புரிந்து கொள்ள வேண்டியுள்ளது. கடந்த 2019ம் ஆண்டு தேர்தலுக்குப் பிறகு, 2022 வரை நிலைமை மோசமாகி, பல மக்கள் கடும் பிரச்சினைகளை எதிர்நோக்கினர். நெருக்கடியின் உச்சத்தில், எரிபொருளுக்கு தட்டுப்பாடு, மக்களுக்கு உணவில்லா பிரச்சினை என பல நெருக்குதல்களை மக்கள் எதிர்நோக்கினர். இன்றும் விலை அதிகமாகவும், மறுபுறத்தில் சம்பளம் குறைவாகவும் காணப்படுகின்றது. அதே நேரத்தில், பிரபல அரசியல் தலைவர்கள் மற்றும் பிரதான கட்சிகள் மீது கடும் விரக்தியும் அதிருப்தியும் மக்கள் மத்தியில் ஏற்பட்டது. அரசியல்வாதிகள் சட்டவிரோதமான முறையில் வளங்களை ஈட்டிக்கொள்வதாக பலர் கருதினர். இலங்கையில் ஊழல் என்பது ஒரு பெரிய பிரச்சினையாகவே காணப்படுகின்றது.
இந்தப் பின்னணியில், 2022ல் அரகலய எதிர்ப்பு இயக்கம் உருவாக்கப்பட்டு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்தப் போராட்டம் இறுதியில் அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை நாட்டை விட்டு தப்பிச் செல்லும் அளவிற்கு உச்சம் பெற்றது.
உண்மையில், இந்த இயக்கமே திசாநாயக்கவுக்கும் உதவியது.
ஊடகவியலாளர்: எந்த வகையில்?
திஸாநாயக்கவின் தேசிய மக்கள் சக்தி அல்லது ஜே.வி.பி. கட்சியானது, மக்களை அணிதிரட்டுவதில் எப்போதும் சிறந்து விளங்குகிறது. இது போராட்டங்களின் போது இருந்தது மற்றும் அவர்களின் வேகத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்த முடிந்தது. ஜே.வி.பி. தலைமையிலான இளம் தேசிய மக்கள் சக்தி (NPP) கூட்டணியில், அரகலயா இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் பல பெண்கள், கல்வியாளர்கள், தொழிற்சங்கவாதிகள் மற்றும் – முக்கியமாக சிங்கள – சிவிலியன் மக்களின் பிற பிரதிநிதிகள் உட்பட பிற ஆர்வலர்கள் இணைந்தனர். இந்தப் புதிய கூட்டணியின் மூலம் திஸாநாயக்க ஜே.வி.பி.யின் பிரச்சனைக்குரிய கடந்த காலத்திலிருந்து திசைதிருப்பப்பட்டு தனக்கென ஒரு புதிய பிம்பத்தை உருவாக்கிக் கொண்டார்.
1970 மற்றும் 1980 களில் அரசாங்கத்திற்கு எதிராக ஜே.வி.பி வழிநடத்திய இரண்டு ஆயுத எழுச்சிகளை ‘பிரச்சினைக்குரியது’ என்று குறிப்பிடுகிறீர்களா?
திஸாநாயக்க இரண்டாவது கிளர்ச்சியின் போது ஜே.வி.பியில் மாணவர் தலைவராக இருந்தார். 1990 களில் ஜே.வி.பி ஆயுதங்களைக் கீழே போட்டபோது அவரும் இருந்தார். அப்போதிருந்து, கட்சி இனி புரட்சிகர கொள்கைகளை பின்பற்றவில்லை மற்றும் கட்சி அரசியல் பரப்பில் வெற்றிகரமாக தன்னை ஒருங்கிணைத்துக்கொண்டது. புதிய கூட்டணியுடன், திசாநாயக்க இப்போது கிட்டத்தட்ட சமூக ஜனநாயகப் போக்கை பின்பற்றி வருகிறார்.
ஊடகவியலாளர்: ஊடகங்கள் எப்போதும் திசாநாயக்க ஒரு மார்க்சிஸ்ட் என்றும் அவர் லெனினையோ அல்லது பிடல் காஸ்ட்ரோவையோ போற்றுவதாகவும் வலியுறுத்துகின்றன. அவர் உண்மையில் மார்க்சியவாதியா அல்லது இடதுசாரியா?
ஜே.வி.பி எப்போதும் சிங்கள-பௌத்த தேசியவாதத்தையே பிரதிநிதித்துவப்படுத்துகிறது. இடது-வலது திட்டம் உண்மையில் இலங்கைக்கு பொருந்தாது. முந்தைய அரசாங்கங்கள் தங்களை சமூக ஜனநாயகம் அல்லது சோசலிஸ்ட் என்று அழைத்தன, ஆனால் அதே நேரத்தில் புதிய தாராளவாத அல்லது இனவாத கொள்கைகளை பின்பற்றின. இந்த விடயம் மிகவும் சிக்கலானது, இலங்கை அரசியல் பரப்பில் இன மற்றும் மத பின்னணிகள் ஒரு பாத்திரத்தை வகிக்கின்றன, திசாநாயக்க இப்போது அதை உடைக்க விரும்புகிறார்: ஊழலுக்கு எதிரான போரை அவர் அறிவித்துள்ளார். ஏழைகளுக்கான கொள்கைகளைத் தொடர விரும்புவதாகவும், பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு வழங்க விரும்புவதாக அவரது கூட்டணி தெளிவாக அறிவித்துள்ளது.
திஸாநாயக்க விரிவான சமூக வேலைத்திட்டங்களுக்கும் உறுதியளித்துள்ளார் மற்றும் நெருக்கடியின் போது எடுக்கப்பட்ட 2.9 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கடனுக்கான நிபந்தனைகளை சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவதாக அறிவித்துள்ளார் – இது அதிக வரிகள் காரணமாக ஏழை மக்களை பிரதானமாக பாதிக்கும்.
ஏகாதிபத்தியம் என்று அவர்கள் கருதும் IMF போன்ற மேற்கத்திய நிறுவனங்களுடனான ஒத்துழைப்பை அடிப்படையாக நிராகரிக்கும் கருத்தியல் கடும்போக்குவாதிகள் திஸாநாயக்கவின் கட்சியில் இன்னும் இருந்தாலும், அவர் பேரம் பேசுவதற்கான தனது விருப்பத்தை வலியுறுத்தினார்.
தேர்தலுக்கு முன். அதே நேரத்தில், சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகள் மிகவும் கடுமையானதாக இருந்தாலும், உண்மையில் பேச்சுவார்த்தைக்கு அதிக இடமில்லாத நிலையில்அவர் மக்களுக்கு பெரிய வாக்குறுதிகளை அளித்தார்.
ஊடகவியலாளர்: திசாநாயக்கவின் கீழ் நிலைமை மேம்படும் என்று மக்கள் இன்னமும் நம்புகிறார்களா?
ஜனாதிபதித் தேர்தலுக்கு சற்று முன்னர் ஆகஸ்ட் மாதம் நான் இலங்கையில் இருந்தேன், அது நிச்சயமாக ஒரு பெரிய பிரச்சினையாக காணப்பட்டது. எதிர்காலத்தைப் பற்றிய பெரும் அச்சத்தை நான் உணர்ந்தேன். அண்மைய ஆண்டுகளில், பொருளாதார ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் மிகவும் நிலையற்றதாக உள்ளது. ஏற்கனவே பலர் வேறு இடங்களில் வேலை தேடுவதற்காக நாட்டை விட்டு வெளியேறியிருந்தாலும், இன்னும் அதிகமானோர் இந்த நடவடிக்கையை எடுப்பது குறித்து ஆலோசித்து வருகின்றனர். ஆனால் நான் கொழும்பிலும் நாட்டின் வடகிழக்கில் உள்ள தமிழர் பிரதேசங்களிலும் மட்டுமே இருந்தேன். திசாநாயக்க அதிக வாக்குகளைப் பெற்ற சிங்களத் தெற்கில், மனநிலை வேறுவிதமாக இருக்கலாம்.
ஊடகவியலாளர் : தமிழர்கள் யாருக்கு வாக்களித்தார்கள்?
நான் பேசிய நபர்கள் மிகவும் நடைமுறைச் சிந்தனை உடையவர்கள் – அவர்கள் இரண்டு தீமைகளில் குறைவானதைத் தேர்ந்தெடுக்கப் பழகிவிட்டனர். சிலர் பொருளாதார அடிப்படையில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு வாக்களித்தனர், சிலர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு வாக்களித்தனர், சிலர் தேர்தலைப் புறக்கணித்தனர், இன்னும் சிலர் தமிழ் வேட்பாளர் பாக்கியசெல்வம் அரியநேத்திரனுக்கு வாக்களித்தனர்.
ஊடகவியலாளர்: திஸாநாயக்க தமிழ் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் அல்லவா?
மக்கள் மிகவும் எச்சரிக்கையாக உள்ளனர். கடந்த காலங்களில் திஸாநாயக்கவின் கட்சி தெளிவான தமிழர் விரோதக் கொள்கையை கடைப்பிடித்தது, உதாரணமாக சமாதானப் பேச்சுக்களுக்கு எதிராகக் குரல் கொடுத்தது. ஜே.வி.பி உட்பட முன்னைய ஆட்சியாளர்கள் எவராலும் கேள்வி கேட்கப்படாத இலங்கை ஒற்றையாட்சியில் சிறுபான்மையினருக்கு இடமில்லை. ஆனால் இந்த விடயத்திலும் தேசிய மக்கள் சக்தி கூட்டணியுடன் திஸாநாயக்க இந்தப் பிம்பத்திலிருந்து விலகிச் செல்ல முயற்சிக்கிறார். அவர் ஏற்கனவே சில கவனமாக விட்டுக்கொடுப்புகள் குறித்து அறிவித்துள்ளார். உதாரணமாக தமிழர்களின் பிரச்சனைகள் நீண்ட காலம் புறக்கணிக்கப்பட்டுள்ளதனை ஏற்பதாக ஒப்புக்கொள்கிறார்.
ஊடகவியலாளர்: எனவே நீங்கள் எச்சரிக்கையுடன் நம்பிக்கையுடன் இருப்பதாக ஒருவர் கூற முடியுமா?
மிகவும் எச்சரிக்கையுடன் ஒருவேளை நம்பிக்கையுடன் இருக்கலாம். என்னைப் பொறுத்தவரை, போர்க்குற்றங்கள் அல்லது தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக் கோரிக்கைகள் தொடர்பாக திஸாநாயக்க எவ்வாறு ஒத்துழைப்பார் என்பதைப் பொறுத்தது. மேலும் நவம்பர் மாதம் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு அவரது கூட்டணி யாருடன் இணைந்து செயல்படும் என்பது ஆர்வத்தை தூண்டும் வகையிலானது.
சாஹித்யன் திலிப்குமார் (28) என்பவர், வடகிழக்கு இலங்கையில் உள்ள தமிழ் மக்களுக்கு ஆதரவளிக்கும் பீப்பிள் ஃபார் ஈக்வாலிட்டி அண்ட் ரிலீஃப் இன் லங்கா (Pearl) என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் உறுப்பினராக உள்ளார். அவர் இராஜதந்திர பிரதிநிதிகள் மற்றும் ஐக்கிய நாடுகள் நிறுவனங்களுக்கு தொடர்ந்து ஆலோசனை வழங்கி வருகின்றார். புகலிடக் கோரிக்கையாளர்களுக்கான சட்டப் பிரதிநிதியாகவும் சட்டத்தரணியாகவும் முழு நேரமும் பணியாற்றுகிறார். அவர் சூரிச்சில் வசிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
நேர்காணல்: அய்ஸ் டர்கன்
நன்றி: WOZ