ஶ்ரீலங்கான் விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான விமானமொன்றில் விமானிக்கும், துணை பெண் விமானிக்கும் இடையில் முரண்பாட்டு நிலை ஏற்பட்டமை குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கடந்த செப்டம்பர் மாதம் 21ம் திகதி அவுஸ்திரேலியாவின் சிட்னியிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணம் செய்த விமானத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
யூ.எல். 607 என்ற விமானத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
விமானத்தின் விமானி, துணை விமானியை கொக்பிட்டிற்கு வெளியே வைத்து கதவை மூடியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
துணை விமானி, விமானத்தின் கழிப்பறையை பயன்படுத்தி கொக்பிட்டிற்கு திரும்பிய போது பிரதான விமானிக்கும், துணை விமானிக்கும் ஏற்பட்ட முரண்பாட்டின் வெளிப்பாட்டினால் இவ்வாறு பிரச்சினை ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
விமானிகளுக்கு இந்த சம்பவத்தைத் தொடர்ந்து விமானப் பயணங்கள் வழங்கப்படவில்லை எனவும், பூரண விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
விசாரணை நடவடிக்கைகளுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கப்படும் என -ஶ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.
விமானப் பயணிகளின் பாதுகாப்பினை உத்தரவாதம் செய்யக்கூடிய வகையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஶ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.

