வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மத்தியில் மிகவும் பிரபல்யமான சுற்றுலாத் தளங்களில் ஒன்றாக அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள அறுகம்பே காணப்படுகின்றது.
அறுகம்பே பகுதிக்கான பயணங்களை தவிர்க்குமாறு அமெரிக்கா, தனது நாட்டுப் பிரஜைகளுக்கு இன்று அதிகாரபூர்வமாக எச்சரிக்கை வெளியிட்டிருந்தது.
அறுகம்பே பிரதேசத்தின் முக்கிய சுற்றுலாத்தளங்களை இலக்கு வைத்து தீவிரவாத தாக்குதல் நடத்தப்படக்கூடும் என்பது குறித்து முக்கிய புலனாய்வு தகவல்கள் கிடைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
இதேவேளை, அறுகம்பே பிரதேசத்திலிருந்து வெளியேறுமாறு இஸ்ரேலிய பிரஜைகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலிய பாதுகாப்பு பேரவை, இலங்கை வாழ் இஸ்ரேலிய பிரஜைகளிடம் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளது.
வெளிநாட்டவர்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்படக் கூடும் என கடந்த 7ம் திகதி புலனாய்வு தகவல்கள் கிடைக்கப் பெற்றதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, பிரித்தானியா, அவுஸ்திரேலியா, கனடா, உள்ளிட்ட சில நாடுகள் இந்த தாக்குதல் அச்சுறுத்தல் தொடர்பிலான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளன.
அறுகம்பே பிரதேசத்தில் இஸ்ரேலிய மக்கள் வாழும் கட்டடமொன்று காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்தப் பகுதியில் இஸ்ரேலியர்கள் கட்டடங்களை கொள்வனவு செய்துள்ளதாக பொத்துவில் பிரதேச செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த ஹோட்டல்களில் சில இஸ்ரேலியர்கள் பணியில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இஸ்ரேலியர்கள் குறித்த பகுதியில் மதவழிபாட்டுத் தளமொன்றையும் அமைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பிலிருந்து 412 கிலோ மீற்றர் தொலைவில் நாட்டின் கிழக்கு மாகாணத்தில் அறுகம்பே அமைந்துள்ளது.