இலங்கையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த விஜேசூரிய தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கின் யுத்த சூழ்நிலை தீவிரமடைந்ததையடுத்து, ஒக்டோபர் மாதத்திற்குள் பயங்கரவாத குழுக்களால் இலங்கைக்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடும் என உளவுத்துறை அறிக்கைகள் வெளியிடப்பட்டிருந்தன.
இலங்கையிலுள்ள வெளிநாட்டு பிரஜைகள் மீது தாக்குதலுக்கு முகம் கொடுக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் விசேட பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாதுகாப்பை பலப்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க கலந்து கொண்ட தேசிய பாதுகாப்பு சபையினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக பதில் பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் உள்ள அனைத்து வெளிநாட்டினரின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், நிலைமை குறித்து அனைத்து தூதரகங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
உள்ளூர் மக்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிடப்படவில்லை என்றும், பயங்கரவாத அச்சுறுத்தல் அல்லது தாக்குதல் குறித்து ஏதேனும் தகவல் இருந்தால் அருகில் உள்ள காவல்துறைக்கு தெரிவிக்குமாறு பொதுமக்களிடம் கோரப்பட்டுள்ளது.