இஸ்ரேலியர்கள் மீது இலங்கையில் தீவிரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த குற்றச்சாட்டின் பேரில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கையின் பயங்கரவாத விசாரணை பிரிவு குறித்த இருவரையும் கைது செய்துள்ளது.
அறுகம்பே பகுதியில் தாக்குதல் நடத்துவதற்கு இந்த இருவரும் திட்டமிட்டிருந்தனர் என தெரிவிக்கப்படுகிறது.
இந்திய உளவுப் பிரிவினர் இது தொடர்பான தகவல்களை இலங்கை பாதுகாப்பு தரப்பினருக்கு வழங்கியிருந்தனர்.
அம்பாறை மாவட்டம் பொத்துவில் பகுதியில் அமைந்துள்ள அறுகம்பே கடற் பகுதியில் சர்ஃபிங் நீர் விளையாட்டுகளில் ஈடுபட அதிகளவு சுற்றுலாப் பயணிகள் நாட்டம் காட்டுகின்றனர்.
இந்தப் பகுதியில் அதிக எண்ணிக்கையிலான இஸ்ரேல் சுற்றுலா பயணிகளை காண முடிகிறது.
இவ்வாறான ஒரு பின்னணியில் அறுகம்பே பிரதேசத்தில் தங்கியுள்ள இஸ்ரேலியர்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என இந்திய புலனாய்வு பிரிவு அண்மையில் அறிவித்திருந்தது.
கடந்த 19ஆம் திகதி முதல் 23ஆம் திகதி அளவில் இந்த தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த தாக்குதலை நடத்துவதற்கு இரண்டு இலங்கையர்கள் ஆயத்த நிலையில் இருப்பதாகவும் இதில் ஒருவர் ஈராக்கில் இருந்து நாடு திரும்பியவர் எனவும் புலனாய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த இருவரும் தொடர்பிலும் சகல விதமான தகவல்களையும் இந்திய புலனாய்வு பிரிவு இலங்கை பாதுகாப்பு பிரிவிற்கு வழங்கி இருந்தது.
ஹிஸ்புல்லா தலைவர்கள் இஸ்ரேலிய தாக்குதல்களில் உயிரிழந்தமைக்கு பழிவாங்கும் நோக்கில் இந்த தாக்குதல் திட்டமிடப்பட்டிருந்தது என தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, அறுகம்பே, தென் மற்றும் மேல் கடற்கரையோரப் பகுதிகளிலிருந்து வெளியேறுமாறு இஸ்ரேலிய மக்களுக்கு இஸ்ரேல் பாதுகாப்பு தலைமையகம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
காலி, ஹிக்கடுவ மற்றும் வெலிகம போன்ற பகுதிகளில் இருந்தும் இஸ்ரேலிய மக்கள் வெளியேறுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
யூத மதப் பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டாம் எனவும் பாதுகாப்பற்ற இடங்களில் ஒன்று கூட வேண்டாம் எனவும் இஸ்ரேலிய மக்களுக்கு அந்நாட்டு அரசாங்கம் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.