அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி ஈட்டிய குடியரசு கட்சியின் வேட்பாளர் டொனால்ட் ட்ரம்பிற்கு சுவிட்சர்லாந்து ஜனாதிபதி வயோலா ஹம்ஹார்ட் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான விஞ்ஞான மற்றும் பொருளாதார உறவுகள் மேலும் வலுப்படுத்திக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
சமூக ஊடகங்களில் ஒன்றான எக்ஸ் தளத்தில் ஹம்ஹார்ட் தனது வாழ்த்துச் செய்தியை பதிவிட்டுள்ளார்.
அமெரிக்காவுடன் தொடர்ந்தும் பணியாற்றுவதற்கு விரும்புவதாக சுவிட்சர்லாந்து ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா, சுவிட்சர்லாந்தின் இரண்டாவது பெரிய வர்த்தக பங்குதாரர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோன்று அமெரிக்காவில் அதிக அளவு முதலீடு செய்த நாடுகளின் வரிசையில் சுவிட்சர்லாந்து ஏழாம் இடத்தில் காணப்படுகின்றது.
அமெரிக்காவிடமிருந்து கடந்த ஆண்டு சுவிட்சர்லாந்து 29.7 பில்லியன் சுவிஸ் பிராங்குகள் பெறுமதியான பொருட்களை இறக்குமதி செய்துள்ளதுடன் 56.6 பில்லியன் சுவிஸ் பிராங்குகள் பெறுமதியான பொருட்களை ஏற்றுமதி செய்துள்ளது.
சுவிட்சர்லாந்து புலம்பெயர் சமூகத்தில் பத்து வீதமானவர்கள் அமெரிக்காவில் வாழ்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ட்ராம்ப் அமோக வெற்றியை பதிவு செய்துள்ளார்.