பாதுகாப்பு அமைச்சினால் வழங்கப்படும் உரிமைத்துடனான ஆயுதங்களை மீள ஒப்படைப்பதற்கான கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது.
இதன்படி எதிர்வரும் 21 ஆம் திகதி வரையில் பாதுகாப்பு அமைச்சின் உரிமம் பெற்ற ஆயுதங்களை மீள ஒப்படைக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆயுதங்கள் பாதுகாப்பு அமைச்சிடம் குறித்த திகதிக்கு முன்னர் ஒப்படைக்கப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இவ்வாறு ஆயுதங்களை மீள ஒப்படைப்பதற்காக பாதுகாப்பு அமைச்சு ஒரு மாத கால அவகாசம் வழங்கியிருந்தது.
இந்த கால அவகாசம் நேற்றைய தினத்துடன் நிறைவடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
எவ்வாறெனினும், பல்வேறு காரணங்களை கருத்தில் கொண்டு இந்த கால அவகாசத்தை நீடிப்பதாக பாதுகாப்பு அமைச்சர் அறிவித்துள்ளது.
தற்காப்பு நோக்கில் பாதுகாப்பு அமைச்சு பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் தொடர்பில் மீளாய்வு செய்யப்பட்டு இந்த ஆயுதங்களை மீள வழங்குவது குறித்து கவனம் செலுத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
வெலிசர கடற்படை முகாமில் இந்த ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும் என பாதுகாப்பு அமைச்சு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அரசியல்வாதிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் சிலர், ஒன்றிக்கும் மேற்பட்ட ஆயுதங்களை வைத்திருப்பதாகவும் இவர்கள் அதற்கான உரிமத்தையும் பெற்றுக் கொண்டுள்ளதாகவும் அண்மையில் தகவல்கள் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.