பதவிகளுக்காக தாம் கட்சி கொள்கைகளை விட்டுக் கொடுக்கப் போவதில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
அண்மையில் ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தரப்பு கடந்த காலங்களில் தம்மை பிரதமராக பதவி ஏற்குமாறு கோரியிருந்ததாகத் தெரிவித்துள்ளார்.
அனுரவும் விஜித ஹேரத்தும் தமது வீட்டுக்கு வந்து இந்த அழைப்பினை மேற்கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக நாட்டில் ஸ்திரமற்ற நிலை நிலவிய போது இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ரணில் விக்ரமசிங்க, டலஸ் அழப்பெரும மற்றும் அனுரகுமார திஸாநயாக்க ஆகியோர் நாடாளுமன்றில் ஜனாதிபதி பதவிக்காக போட்டியிட்ட போது, அனுர உரையாற்றுகையில் எமது சிந்தனையில் சுமந்திரன் பிரதமராக வேண்டுமென நினைக்கின்றோம் என கூறியிருந்தார் என தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாகவும் தமக்கு ஆதரவளிக்குமாறு அனுரகுமார திஸாநாயக்க கோரியதாகத் தெரிவித்துள்ளார்.
ஆதரவு வழங்கினால் நீதி, அரசியல் விவகாரம் மற்றும் ஊழல் ஒழிப்பு அமைச்சு பொறுப்பினை வழங்குவதாக உறுதிமொழி வழங்கப்பட்டது என அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் தாம் இவ்வாறு பதவிகளுக்காக கட்சி கொள்கைகளை விட்டுக் கொடுத்தது கிடையாது எனவும் எதிர்காலத்திலும் அவ்வாறு செய்யப் போவதில்லை எனவும் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.