இலங்கையில் நாளைய தினம் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அனைத்து ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பொதுத் தேர்தலுக்கான வாக்குப் பெட்டிகள் மற்றும் அனைத்து எழுது பொருட்களும் இன்றைய நாள் முழுவதும் விநியோகிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
நாளைய தினம் காலை 7.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை இந்த நடவடிக்கைகள் இடம்பெறும் என தேர்தல் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.
13,314 வாக்குச் சாவடிகளில், நாளை இடம்பெறவுள்ள பாராளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது.
வாக்குப்பெட்டிகள், வாக்குச் சீட்டுகள் மற்றும் அனைத்து எழுது பொருட்களும் விநியோகிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகுின்றது.
22 தொகுதிகளுடன் தொடர்புடைய 25 மாவட்டச் செயலகங்களில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இன்று காலை 7 மணி முதல் பணிகள் ஆரம்பமாகவுள்ள நிலையில், அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பணிபுரியும் ஊழியர்களுக்காக ஒத்திகை ஒன்றும் நடத்தப்பட உள்ளது.
பொதுத் தேர்தலின் பாதுகாப்பிற்காக நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள அனைத்து வாக்களிப்பு நிலையங்களிலும் சுமார் 64,000 பொலிஸ் உத்தியோகத்தர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
பொலிஸாருக்கு மேலதிகமாக இராணுவத்தினரும் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இம்முறை தேர்தல் கண்காணிப்பு பணிகளுக்காக சுமார் 6000 பிரதிநிதிகள் அடங்கிய குழுவை ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.