தற்பொழுத நடைபெற்று வரும் பொதுத் தேர்தலுக்கான முதலாவது தேர்தல் முடிவு இன்று இரவு 10 மணியளவில் வெளியாகும் என தேர்தல் ஆணைக்குழு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
முதலாவது முடிவை தொடர்ந்து, அதன் பின்னர் தொடர்ச்சியாக ஒவ்வொரு முடிவுகளையும் வெளியிடக் கூடியதாக இருக்குமென எதிர்பார்ப்பதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க குறிப்பிட்டார்.
அதற்கமைய, வாக்களிப்பு நடவடிக்கைகள் மாலை 4 மணிக்கு நிறைவடையும். வாக்களிப்பு நடவடிக்கைகள் நிறைவடைந்ததும் அமைக்கப்பட்டுள்ள 2034 வாக்களிப்பு நிலையங்களுக்க வாக்கு பெட்டிகள் கிடைத்ததும் வாக்கு எண்ணும் நடவடிக்கைகள் ஆரம்பமாகவுள்ளது.
தபால் மூல வாக்குகளை எண்ணும் நடவடிக்கைகள் மாலை 5 மணிக்கு ஆரம்பமாகும் என்பதுடன் பிரதான வாக்குகளை எண்ணும் செயற்பாடுகள் வாக்கு பெட்டிகள் கிடைத்தவுடன் ஆரம்பமாகவுள்ளது.
எனவே, வாக்கு எண்ணும் நிலையங்களின் வினைத்திறனான செயற்பாடுகளின் அடிப்படையிலேயே தேர்தல் முடிவுகளை வெளியிடும் செயற்பாடுகள் தீர்மானிக்கப்படும். மாலையாகும்போது தேர்தல் செயற்பாடுகளில் காலநிலையும் தாக்கம் செலுத்தக்கூடும்.
அதனால் அதிகாரிகள் முடிந்தளவுக்கு இந்த செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவார்கள் என்று எதிர்பார்க்கிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.