இலங்கை சனநாகய சோசலிச குடியரசின் வரலாற்றில் முதல் தடவையாக அரசியல் ரீதியில் மாபெரும் மாற்றம் ஒன்று நிகழ்த்தப்பட்டுள்ளது.
கடந்த 76 கால வரலாற்றில் பிரதான அரசியல் நீரோட்டத்தின் கட்சிகள் மாறி மாறி ஆட்சி நடத்தி வந்தன.
பொதுவாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையிலான கூட்டணிகளும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமையிலான கூட்டணிகளும், சுதந்திர கட்சியில் இருந்தும் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்தும் பிளவடைந்து சென்று உருவாக்கப்பட்ட கூட்டணிகளினாலும் இலங்கை ஆட்சி செய்யப்பட்டு வந்தது.
கட்சிகள் மாற்றம் பெற்றாலும் அரசியல் கொள்கை நிலைப்பாடுகளில் பெரிதான மாற்றங்கள் காணப்படவில்லை.
இலங்கை வரலாற்றில் 30 ஆண்டுகால யுத்தம் உள்ளிட்ட பல்வேறு சவால்கள் எதிர் நோக்க பட்டாலும் ஆட்சியாளர்களின் மோசமான செயற்பாடுகளே இலங்கை தேசம் பின்னோக்கிய நகர்வதற்கான காரணம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறிப்பாக முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ ஆட்சி பொறுப்பினை ஏற்றுக் கொண்டதன் பின்னர் நாடு வங்குரோத்து அடைந்தது.
நாட்டின் பொருளாதார பின்னடைவிற்கும், சுகாதாரம், கல்வி உள்ளிட்ட மிக அத்தியாவசியமான துறைகளில் காணப்படும் பல்வேறு குறைபாடுகளுக்கு ஆட்சியாளர்களின் திறனற்ற ஆட்சியும் ஊழல் மோசடிகளுமே காரணம் என குற்றம் சுமத்தப்பட்டது.
அந்த அடிப்படையில் கடந்த ஜனாதிபதி தேர்தலில் மாற்றம் ஒன்றை நோக்கி பிரசாரம் செய்யப்பட்ட தேசிய மக்கள் சக்தி வெற்றியீட்டியது.
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியாகத் தெரிவானார்.
குறுகிய இடைவெளியில் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்பட்டது.
நேற்றைய தினம் நடத்தப்பட்ட இந்த நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வரலாற்றில் எந்த ஒரு கட்சியும் பெற்றுக் கொள்ளாத மாபெரும் மக்கள் ஆணையை பெற்றுக் கொண்டுள்ளது.
பொதுவாக பேரினவாத கொள்கைகள் அடிப்படையில் கடந்த காலங்களில் சிறுபான்மை சமூகங்கள் வாழும் பகுதிகளில் வாக்களிப்பு பெறுபேறுகள் வெளிப்படும்.
எனினும் இம்முறை தேர்தலில் யாழ்ப்பாணம், பதுளை, நுவரெலியா, திருகோணமலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேசிய மக்கள் சக்தி அமோக வெற்றியை பதிவு செய்துள்ளது.
இம்முறை தேசிய மக்கள் கட்சியில் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்களும் போட்டியிட்டு இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஊழல் மோசடிகளை ஒழித்தல், மோசடிகளில் ஈடுபட்டவர்களை தண்டித்தல், வீண் விரயத்தை தடுத்து நாட்டை அபிவிருத்தி பாதைக்கு இட்டுச் செல்லல் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளுடன் தேர்தலில் மக்களின் ஆணையை கோரிய தேசிய மக்கள் சக்தியை மக்கள் இரு கரங்களினாலும் தழுவிக்கொண்டனர்.
அந்த வகையில் நடைபெற்று முடிந்த தேர்தலில் தேசிய பட்டியல் தவிர்ந்த மாவட்ட ரீதியான ஆசனங்களில் தேசிய மக்கள் சக்தி மொத்தமாக 141 ஆசனங்களை பெற்றுக் கொண்டுள்ளது.
இதன் மூலம் தேசிய மக்கள் சக்தியின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் நிச்சயம் உறுதியாகும் என தெரிவிக்கப்படுகிறது.
தேசிய மக்கள் சக்திக்கு 68 லட்சம் பேர் வாக்களித்துள்ளனர், இரண்டாம் இடத்தை பிடித்துக் கொண்டுள்ள ஐக்கிய மக்கள் சக்திக்கு 19 லட்சம் பேர் மட்டுமே வாக்களித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தேசியவாத மற்றும் இன அடிப்படையிலான பிரசாரங்களை முன்னெடுத்து வந்த பல்வேறு அரசியல் கட்சிகள் இம்முறை தேர்தலில் அடையாளம் இழந்து உள்ளமை குறிப்பிடத்தக்கது.