அண்மையில் இலங்கையில் நடைபெற்று முடிந்த பொது தேர்தலில் தேசிய பட்டியல் ஆசனங்கள் தொடர்பில் கட்சிகளுக்கிடையில் குழப்ப நிலை உருவாகியுள்ளது.
தேசிய மக்கள் சக்தி தவிர்ந்த ஏனைய கட்சிகளில் இந்த குழப்ப நிலை உருவாகியுள்ளது.
தேசிய மக்கள் சக்தி ஏற்கனவே அறிவித்தது போன்று தேசிய பட்டியல் உறுப்பினர்களை நியமித்திருந்தது.
தேசிய மக்கள் சக்தியின் சார்பில் கட்புலனற்ற ஒருவர் உள்ளிட்ட 18 பேர் தேசியப்பட்டியலுக்காக பரிந்துரைக்கப்பட்டனர்.
ஏனைய அரசியல் கட்சிகள் பலவற்றிலும் தேசிய பட்டியல் ஆசனம் தொடர்பில் கடும் முரண்பாட்டு நிலை உருவாகியுள்ளது.
குறிப்பாக புதிய ஜனநாயக முன்னணிக்கு இரண்டு தேசியப் பட்டியல் ஆசனங்கள் கிடைக்கப்பெற்றன.
இவற்றில் ஒன்றுக்கு ரவி கருணாநாயக்க பெயரிடப்பட்டுள்ளார்.
கட்சியின் பொதுச்செயலாளரை பலவந்தப்படுத்தி இவ்வாறு ரவி கருணாநாயக்க தேசிய பட்டியல் உறுப்புரிமைக்காக தனது பெயரை பரிந்துரை செய்து கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
தேசிய பட்டியல் ஒரு உரிமைக்கு பல்வேறு தரப்பினர் போட்டியிடுகின்றனர்.
முன்னாள் அமைச்சர் சஞ்சனா விஜயசேகரவிற்கு வழங்கப்பட வேண்டும் என ஒரு தரப்பினர் கோரியுள்ளனர்.
தினேஷ் குணவர்தன> பைசர் முஸ்தபா உள்ளிட்ட சிலரும் இந்த உறுப்புரிமை தமது கட்சிக்கு தமக்கு வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த நிலையில் ஐக்கிய மக்கள் சக்தியிலும் இதே குழப்ப நிலை நீடித்து வருகின்றது.
கொழும்பு மாவட்டத்தில் தேர்தலில் தோல்வி அடைந்த மனோ கணேசனுக்கு ஆசனம் ஒன்று வழங்கப்பட வேண்டும் என கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
எவ்வாறெனினம், இந்த தேசிய பட்டியல் ஒரு உறுப்புரிமை தொடர்பிலும் குழப்ப நிலை நீடித்து வருவதனால் இதுவரையில் தேசிய பட்டியல் ஆசனங்களுக்கான பெயர்கள் பரிந்துரைக்கப்படவில்லை.
ஸ்ரீலங்கா பொதுஜன கட்சி தனது தேசிய பட்டியல் வேட்பாளராக கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்சேவை பெயரிட்டுள்ளது.
இதேவேளை, தமிழ் தேசியக் கூட்டமைப்பிலும் தேசிய பட்டியல் ஒரு உரிமை தொடர்பில் பல்வேறு முரண்பாட்டின் நிலைமைகள் நீடித்து வந்தது பின்னர், தேசியப்பட்டியல் உறுப்புரிமைக்காக பா.சத்தியலிங்கத்தின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
எனினும் இந்த தெரிவு தொடர்பில் கடுமையான எதிர்ப்பும் அதிருப்தியும் வெளியிடப்பட்டுள்ளது.
சர்வஜன பலய கட்சியின் தேசியப் பட்டியல் உறுப்பரிமைக்காக திலித் ஜயவீர பெயரிடப்பட்டுள்ளார் எனினும் இந்த தெரிவு குறித்தும் அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது.