தமிழ் தேசிய கூட்டமைப்பின் சிரேஸ்ட உறுப்பினரும் சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன் மீது காழ்ப்புணர்ச்சியின் காரணமாக சில திட்டமிடப்பட்ட அவதூறு பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
தமிழ் தேசிய உரிமைகளுக்காகவும் தமிழ் மக்களின் நல்வாழ்விற்காகவும் பல்வேறு சந்தர்ப்பங்களில் தொடர்ச்சியாக குரல் கொடுத்துவரும் ஓர் அரசியல் தலைவர் என்ற வகையில் சுமந்திரன் மீதான அவதூறு பிரச்சாரங்கள் தொடர்ந்தும் அதிகரித்து செல்லும் நிலையினை அவதானிக்க முடிகின்றது.
அண்மையில் நடைபெற்ற முடிந்த பொது தேர்தலில் சுமந்திரன் தோல்வியை தழுவுயிருந்தார்.
சுமந்திரன் பொது தேர்தலில் களம் இறங்குவதற்கு முன்னர் இருந்து திட்டமிட்ட அடிப்படையிலான அவதூறு பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமை பொறுப்பிலிருந்து மாவை சேனாதிராஜா ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு சுமந்திரன் போட்டியிட்டது முதல் இந்த அவதூறு பிரசாரம் தீவிரம் பெற்றது எனக் குறிப்பிடலாம்.
கட்சிக்குள் இருக்கும் சில முக்கியஸ்தர்கள் திட்டமிட்ட அடிப்படையில் சுமந்திரன் மீது திருட்டு பட்டம் கட்டி அவரை அரசியலில் இருந்து ஓரம் கட்டி விட முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை தெட்டத் தெளிவாகின்றது.
குறிப்பாக சுமந்திரன் ஓர் திருடர் என்ற அடிப்படையிலான பிரச்சாரங்களை சில தரப்பினர் ஆணித்தரமாக முன்னெடுத்து வருகின்றனர்.
எனினும், இதற்கான ஆதாரங்களையோ பின்னணிகளையோ குற்றம் சுமத்தும் எவரும் இதுவரையில் பட்டியலிடவில்லை என்பது வேதனைக்குரியது.
புலம்பெயர் தமிழ் சமூகத்தை பிளவுபடுத்தும் வகையிலும், புலம்பெயர் தமிழ் சமூகத்தை திசை திருப்பும் வகையிலும் இவ்வாறு பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை வேதனைக்குரிய விடயமாகும்.
தமிழ் மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுப்பதற்கு அனைவரும் ஒன்றிணைந்து பலத்தை நிரூபிக்க வேண்டிய ஓர் காலகட்ட சூழ்நிலையில், இவ்வாறு பிளவடைந்து சுயலாப நோக்கிலான அரசியல் அவதூறு பிரசாரங்கள் எம் இனத்திற்கு செய்யும் துரோகமாகவே கருதப்பட வேண்டும்.
தமிழ் மக்கள் பேரம் பேசும் உரிமைகளை இழந்து நிற்பதற்கு இந்த பிரித்தாலும் சூழ்ச்சி திட்டங்களும் சதிகளும் வலிமைத்துள்ளன.
உலகின் பல்வேறு திசைகளின் வாழ்ந்து வரும் தமிழ் மக்களை ஒன்றிணைத்து தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு காத்திரமான தீர்வு பெற்றுக் கொடுப்பதற்கு, அரசியல் சாசனம் சட்டம் தொடர்பான பழுத்த அனுபவமும் அறிவாற்றலும் கொண்ட சமூகம் எமக்கு அத்தியாவசியமானதாகின்றது.
இவ்வாறான ஓர் பின்னணியில் சுமந்திரன் போன்ற அறிவாற்றல் கொண்ட புத்திஜீவிகளை புறந்தள்ளி தமிழர் அரசியல் நகர்வுகள் எந்த திசை நோக்கி நகரும் என்ற கேள்வி எழுப்பப்படுகின்றது.
சில ஊடக நிறுவனங்கள் திட்டமிட்ட அடிப்படையில் சுமந்திரனை மட்டும் இலக்கு வைத்து தொடர்ச்சியான போலிச் செய்திகளையும் அவதூறு பிரச்சாரங்களையும் முன்னெடுத்து வரும் அதேவேளை, கிளிநொச்சி மாவட்டத்தில் மற்றும் ஒரு அரசியல் தலைவரின் புகழ் பாடும் ஊது ஊழலாக மாறியிருப்பது வேதனை அளிக்கின்றது.
ஊடக தர்மத்தின் அடிப்படையில் உள்ளதை உள்ளபடி பக்கச் சார்பின்றி சொல்லக்கூடிய தைரியம் எல்லோருக்கும் வருவதில்லை எனினும் தனிப்பட்ட சேறு பூசல்கள் அவதூறு பிரச்சாரங்கள் ஊடக தர்மத்திற்கு பொருந்தக்கூடியதல்ல.
எனினும் சில ஊடகங்கள் வேண்டுமென்றே ஊடக நிறுவனங்களும் அதன் பிரதானிகளும் திட்டமிட்ட அடிப்படையில் தமிழ் தேசியத்திற்கு எதிரானவர்.
சுமந்திரன் என்ற அரசியல் பிம்பத்தை மக்கள் மத்தியில் சிதைக்க பிரயத்தனங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த முயற்சி தமிழ் மக்களின் அபிலாசைகளை வென்றெடுக்க உதவுமா எமது அடுத்த தலைமுறைக்கு சுபீட்சத்தை கொடுக்குமா? வடக்கிலும் கிழக்கிலும் மற்றும் ஏனைய பகுதிகளிலும் வாழும் தமிழ் சொந்தங்கள் சுதந்திரமாகவும் பொருளாதார தன்னிறைவுடனும் கல்வியில் சிறந்து நட்பிரஜைகளாக திகழவும் தமிழர் அரசியல் நீரோட்டமானது தெள்ளத் தெளிவான கொள்கைகளுடன் சீரான முறையில் நகர வேண்டிய கட்டாயம் காணப்படுகின்றது.
மக்கள் விடுதலை முன்னணி என்ற ஊர் சிறு கட்சி தேசிய மக்கள் சக்தியாக வியாபித்து விஸ்வரூபம் எடுத்து இன்று இலங்கையை ஆட்சி செய்யும் பேரியக்கமாக மாறியுள்ளது.
அந்த மாற்றத்திற்கு கட்சியின் ஒழுக்கம் கட்சி உறுப்பினர்களுக்கு இடையிலான அன்னியோன்ய புரிந்துணர்வு, ஓர் கட்டமைப்பு இன்று விஸ்வரூப வெற்றி அளித்துள்ளது.
அந்த வகையில் தமிழ் தேசிய அரசியல் ஆர்வலர்களும் இந்த தேசிய மக்கள் சக்தியின் வெற்றியை புரிந்து கொண்டு அடுத்த கட்ட அரசியல் நகர்வுகளை முன்னெடுப்பது சாலச் சிறந்த ஒன்றாக இருக்கும்.
யார் இந்த சுமந்திரன்
சுமந்திரன் கொழும்பு றோயல் கல்லூரியில் தனது பள்ளிக் கல்வியை தொடர்ந்து, சென்னை பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் இளங்கலைமானி பட்டம் பெற்று பின்னர் கொழும்பு சட்டக் கல்லூரியில் கற்று சட்டத்தரணியாக பணியாற்றியதுடன், மொனஷ் பல்கலைக்கழகத்தில் சட்ட மானி பட்டம் பெற்றுக் கொண்டுள்ளார்.
சுமந்திரன் இலங்கையில் முக்கியமான சில வழக்குகளில் வாதாடி தனது திறமையை உலகறிய செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி சட்டத்தரணியான சுமந்திரன் கொழும்பிலிருந்து தமிழர்கள் வெளியேற்றப்படுவதற்கு எடுக்கப்பட்ட முயற்சிகளின் போது தனது வாதத் திறமையினால் சுமந்திரன் அதனை தடுத்திருந்தார்.
இவ்வாறு பல்வேறு சந்தர்ப்பங்களில் ராஜபக்சங்களுக்கு எதிராகவும் ராணுவ அடக்குமுறைகளுக்கு எதிராகவும் சுமந்திரன் தனது வாதத்திறனை வெளிப்படுத்தி நியாயம் பெற்றுக் கொடுத்துள்ளார் என்பது மறுதலிக்க பட முடியாத உண்மையாகும்.
அரசியல் அரங்கங்களில் தனி மனித புகழ்ச்சிக்கு இடமில்லை என்றாலும் சுமந்திரன் போன்ற அரசியல் ஆளுமைகளின் வெற்றிடம் அவ்வளவு சுலபமாக நிரப்பக்கூடியதல்ல என்பது அரசியல் அவதானிகளின் கணிப்பாக உள்ளது.
எனவே காழ்புணர்ச்சிகளைத் தாண்டி ஒற்றுமையுடன் தமிழ் சமூகத்தின் வெற்றிக்காக புதிய அரசியல் பயணம் ஒன்றை முன்னெடுப்பது காலத்தின் தேவை என்பதை அரசியல் தலைமைகள் புரிந்து கொண்டு அந்த வழியில் பயணித்தால் எதிர்காலம் பிரகாசமானதாகும் என்பதில் சந்தேமில்லை.