மலேசியாவின் செல்வந்தர்களில் ஒருவராக போற்றப்படும் ஆனந்த கிருஷ்ணன் தனது 86 ஆம் வயதில் காலமானார்.
தொலை தொடர்பாடல் துறை முதல் எண்ணெய், எரிவாயு வரையில் பல்வேறு துறைகளில் வியாபாரங்களை செய்து வெற்றிக்கொடி நாட்டிய ஓர் தமிழராக ஆனந்த கிருஷ்ணன் போற்றப்படுகின்றார்.
80 மற்றும் 90களில் மலேசியாவை கட்டி எழுப்பும் முனைப்புக்களில் ஆனந்த கிருஷ்ணனின் பங்களிப்பு மகத்தானது என பாராட்டப்படுகிறது.
மேக்சிஸ் தொடர்பாடல் நிறுவனம் மற்றும் மலேசியாவின் முன்னணி ஒலி ஒளிபரப்பு நிறுவனங்கள் என்பனவற்றை ஆனந்த கிருஷ்ணன் நிறுவி வழிநடத்தியுள்ளார்.
மேலும் எண்ணெய் மற்றும் எரிபொருள் துறையிலும் அவர் பல்வேறு வியாபார முயற்சிகளை முன்னெடுத்து வெற்றியுள்ளார்.
அண்மையில் போர்பஸ் சஞ்சிகையின் தகவல்களின் அடிப்படையில் ஆனந்த கிருஷ்ணன் மலேசியாவின் மூன்றாவது பெரிய செல்வந்தர் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனந்த கிருஷ்ணனின் மொத்த சொத்து மதிப்பு 5 பில்லியன் டொலர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
ஆனந்த கிருஷ்ணனின் ஒரே புதல்வர் பௌத்த பிக்குவாக துறவியாக துறவு பூண்டு தாய்லாந்தில் வசித்து வருகின்றார்.
ஆனந்த கிருஷ்ணனின் இரண்டு புதல்விகளும் வியாபார முயற்சிகளில் அதிக ஆர்வம் காட்டுவதில்லை என தெரிவிக்கப்படுகிறது.
யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்ட ஆனந்த கிருஷ்ணன் மலேசியாவில் மாபெரும் வர்த்தக சாம்ராஜ்யத்தை உருவாக்கி அந்நாட்டின் பொருளாதாரத்திற்கு தனது உழைப்பின் மூலம் பெரும் பங்களிப்பினை வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இறுதிக் கிரியைகள் தொடர்பான விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.