நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் போன்றவர்களின் சலுகைகளை குறைப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதிய கொடுப்பனவு மற்றும் தேவையற்ற வாகன அனுமதி பத்திரம் என்பனவற்றை ரத்து செய்வது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
இதேவேளை தற்பொழுது அமைச்சரவைகளுக்கு சொந்தமான சுமார் 150 அதி சொகுசு வாகனங்களை விற்பனை செய்வதற்கு அமைச்சரவையின் அனுமதி பெற்றுக் கொள்ளப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வீ8 மற்றும் மொன்டரோ போன்ற ஆதி சொகுசு வாகனங்களை வழங்காதிருப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
மேலும் அமைச்சர்களுக்கு வழங்கப்படும் சம்பளங்கள் கொடுப்பனவுகள் குறித்து மீளாய்வு செய்து தீர்மானம் எடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் துப்பாக்கி மற்றும் துப்பாக்கிகளுக்கான உரிமம் என்பனவற்றை வழங்குவது குறித்து தீர்மானம் எடுக்கப்பட உள்ளதாகவும் மக்கள் பிரதிநிதிகளுக்கு வீடுகள் வழங்குவது குறித்து மீளாய்வு செய்யப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களுக்கான சிறப்பு உரிமைகளை மீளாய்வு செய்வதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க விசேட குழு ஒன்றை அண்மையில் நியமித்துள்ளார்.
இந்த குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய அமைச்சர்களுக்கு வழங்கப்படும் சிறப்பு உரிமைகள் குறித்து தீர்மானிக்கப்பட உள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களுக்கான சிறப்பு உரிமைகள் மற்றும் சலுகைகள் வழங்குவது தொடர்பில் அரசாங்கம் ஆராய்ந்து தீர்மானங்களை எடுக்கும் என அரசாங்க தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
அது வரையில் தற்பொழுது வழங்கப்படும் சலுகைகள் மற்றும் சிறப்பு உரிமைகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
தேசிய மக்கள் சக்தியின் அரசியல் மேடைகளில் சிறப்பு உரிமைகள் பெற்றுக் கொள்ளப்படாது எனவும் சம்பளம் தேவையில்லை எனவும் பிரச்சாரம் செய்யப்பட்டிருந்தது.
இந்த விவகாரம் குறித்து எதிர்க்கட்சிகள் தற்பொழுது கேள்வி எழுப்பி வருகின்றன.
தேசிய மக்கள் சக்தியின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களுக்கு எந்த விதமான சலுகைகளும் சிறப்பு உரிமைகளும் தேவை இல்லை என கூறிவரும் அதேவேளை, ஒரு சில அரசியல் கட்சி உறுப்பினர்கள் அல்லது நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களுக்கு அடிப்படை சலுகைகள் தேவைப்படுவதாக தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.