கடந்த காலங்களில் அரசாங்கத்தினால் அரசியல்வாதிகளுக்கு வழங்கப்பட்ட மதுபான சாலை உரிமங்கள் குறித்த தகவல்கள் வெளியிடப்பட உள்ளது.
இன்றைய தினம் நாடாளுமன்ற அமர்வுகளில் இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ராசமாணிக்கம் சாணக்கியன் ஆளும் கட்சியிடம் கேள்வி எழுப்பி இருந்தார்.
மதுபான சாலை உரிமங்கள் வழங்கப்பட்ட விவகாரம் குறித்து தகவல் வெளியிடுமாறு அவர் கோரியிருந்தார்.
இதன் போது குறித்த தகவல்கள் இன்றைய தினம் நாடாளுமன்றில் வெளியிடப்பட உள்ளதாகவும் இது குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் ஆளும் கட்சியின் பிரதம கொரடா டாக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் தமிழ் அரசியல்வாதிகள் சிலரும் இவ்வாறு மதுபானசாலை உரிமங்கள் பெற்றுக் கொண்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
குறிப்பாக வடமாகாண முன்னாள் ஆளுநர் சிவி விக்னேஸ்வரன் இவ்வாறு மதுபான சாலை உரிமம் பெற்றுக் கொண்டார் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இவ்வாறான ஒரு பின்னணியில் குறித்த மதுபான சாலை உரிமங்களை பெற்றுக் கொண்டோர் விபரம் இன்று வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.