நாட்டில் அரிசிக்கு தட்டுப்பாட்டு நிலை ஏற்பட்டுள்ளது. நாளுக்கு நாள் அரிசியின் விலை அதிகரித்து செல்கின்றது அரிசி விலை அதிகரிப்பையும் அரிசிக்கான தட்டுப்பாட்டையும் நிவர்த்தி செய்யும் நோக்கில் அண்மையில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அரிசி ஆலை உற்பத்தியாளர்களுடன் சந்திப்பு நடத்தி இருந்தார்.
இந்த சந்திப்பின் போது அரிசி விலையை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது குறித்து யோசனைகள் முன்வைக்கப்பட்டிருந்தன.
எவ்வாறெனினும் தொடர்ந்தும் நாட்டில் அரிசிக்கு தட்டுப்பாடு நிலவும் காரணத்தினால் அரிசியை இறக்குமதி செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும் அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையை நிர்ணயம் செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
உள்நாட்டு அரிசிக்கு உச்சபட்ச விலையை நிர்ணயம் செய்து இவ்வாறு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி உள்நாட்டு வெள்ளை மற்றும் சிகப்பு பச்சை அரிசி ஒரு கிலோ கிராமின் அதிபட்ச மொத்த விற்பனை விலை 215 ரூபா எனவும் சில்லறை விலை 220 ரூபா எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு நாடு அரிசி ஒரு கிலோ கிராமின் மொத்த விற்பனை விலை 225 ரூபா எனவும் சில்லறை விலை 230 ரூபா எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு கீரி சம்பா அரிசி ஒரு கிலோ கிராமின் மொத்த விற்பனை விலை 255 ரூபா எனவும் சில்லறை விலை 260 ரூபா எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இறக்குமதி செய்யப்படும் அரிசி வகைகள் தொடர்பிலும் கட்டுப்பாட்டு விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, இறக்குமதி செய்யப்படும் பச்சை அரிசி ஒரு கிலோகிராமின் அதிகபட்ச சில்லறை விலை 210 ரூபா எனவும் இறக்குமதி செய்யப்படும் நாடு அரிசி ஒரு கிலோ கிராமின் அதிகபட்ச விலை 220 ரூபா எனவும் வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இறக்குமதி செய்யப்படும் சம்பா அரிசி ஒரு கிலோ கிராமின் அதிகபட்ச சில்லறை விலை 230 ரூபா எனவும் வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது.