இலங்கை நாடாளுமன்றின் சபாநாயகர் அசோகா தொடர்பில் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது அவரது கல்வித் தகமை தொடர்பில் இந்த சர்ச்சை எழுந்துள்ளது.
அசோக ரன்வல மொரட்டுவைப் பல்கலைக்கழகத்தில் முதுமாணி பட்டத்தையும் ஜப்பானில் கலாநிதி பட்டத்தையும் பெற்றுக் கொண்டதாக குறிப்பிடப்பட்டது.
எனினும் அவரது கலாநிதி பட்டம் பொய்யானது என சிலர் குற்றம் சுமத்தி இருந்தனர்.
இது தொடர்பில் பல்கலைக்கழக பேராசிரியரும் மனித உரிமை செயற்பாட்டாளருமான நிர்மால் ரஞ்சித் தேவ்சிறி தேர்தல் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய ஆகியோரும் கருத்து வெளியிட்டிருந்தனர்.
இந்த நிலையில் நாடாளுமன்ற இணையதளத்தில் ஆரம்பத்தில் சபாநாயகரின் பெயருக்கு முன்னால் கலாநிதி பட்டம் போடப்பட்டிருந்தது.
எனினும், தற்பொழுது கலாநிதி அசோக ரன்வல என்பதற்கு பதிலாக அசோக ரன்வல எழுதப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பில் பல்வேறு தரப்பினரும் தங்களது கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.
ஜப்பானில் அசோக ரன்வல கலாநிதி பட்டத்தை கற்கவில்லை என முன்னாள் நீதி அமைச்சர் தலதா அதுகோரள குற்றம் சுமத்தியுள்ளார்.
எனவே போலியான பட்டம் தொடர்பான தகவல்களை வெளியிட்ட சபாநாயகர் பதவி விலக வேண்டும் என அவர் கோரியுள்ளார்.
இந்த நிலையில் விரைவில் சபாநாயகர் தனது கல்வித் தகமை தொடர்பில் தெளிவுபடுத்துவார் என அமைச்சரவை பேச்சாளர் டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
சபாநாயகர் போலி பட்டம் பெற்றுக் கொண்டவரா அல்லது தனது கல்வித் தகமை தொடர்பில் பொய்யான விபரங்களை வெளியிட்டாரா என்பது குறித்து அரசியல் வட்டாரங்களில் கடும் வாத பிரதிவாதங்கள் செய்யப்பட்டு வருகின்றன.
இந்த நிலைமையானது அரசாங்கத்தின் நற்பெயருக்கு பெரும் களங்கத்தை ஏற்படுத்தும் என அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
கடந்த கால ஆட்சியாளர்கள் விட்ட தவறுகளை சுட்டிக்காட்டி ஆட்சி பீடம் ஏறிய தற்போதைய அரசாங்கத்திலும் இவ்வாறான சம்பவங்கள் இடம் பெறுவது பெரும் மக்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை உருவாக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சபாநாயகரின் கல்வித் தகமை தொடர்பான அதிகார பூர்வ தகவல்கள் எதுவும் இதுவரையில் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.