சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்டம் (ITJP) இலங்கையிலும் ஏனைய நாடுகளிலும் மனித உரிமைகள் மற்றும் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்ட இலங்கையைச் சேர்ந்த பாதுகாப்பு அதிகாரிகளுக்கு எதிராக இன்றுவரை 60 க்கும் மேற்பட்ட தடைகள் மற்றும் வீசா தடை கோரிக்கைகளை சமர்ப்பித்துள்ளது.
அமெரிக்கா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, கனடா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் மற்றும் ஐக்கிய நாடுகள் அமைப்பு என்பனவற்றிடம் இவ்வாறு தடை கோரிக்கை முன்வைத்துள்ளன.
இலங்கை இராணுவம், கடற்படை, விமானப்படை, பொலிஸ் மற்றும் புலனாய்வு அதிகாரிகள், தமிழ் துணை இராணுவ குழு உறுப்பினர்கள் மற்றும் நீதிபதிகள் உள்ளிட்ட அரச அதிகாரிகள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் தொடர்பான மனித உரிமை மீறல்கள் மற்றும் பாரிய ஊழல்கள் ஆகியவை இந்த சமர்ப்பிப்புகளை உள்ளடக்கியதாக ITJP தெரிவித்துள்ளது.
உள்நாட்டுப் போரின் போதும் அதற்குப் பின்னரும் நிகழ்த்தப்பட்ட பல்வேறு வகையான பாரிய மனித உரிமை மீறல்கள் மற்றும் சட்டத்திற்குப் புறம்பான கொலைகள், பலவந்தமாக காணாமல் போகச் செய்தல்கள், தன்னிச்சையான கைதுகள் மற்றும் தடுப்புக்காவல்கள், சித்திரவதைகள் மற்றும் பாலியல் வன்முறைகள் ஆகியவை இந்த குற்றச்சாட்டுக்களில் உள்ளடங்குகின்றன.
பொதுமக்களுக்கு எதிரான தாக்குதல்கள் முதல் போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் உட்பட கடுமையான சர்வதேச குற்றச் செயல்களும் இந்த முறைப்பாடுகளில் உள்ளடங்குகின்றன.
மேலும், இலங்கையின் ஆட்சி மற்றும் பொது நிறுவனங்களில் கட்டமைப்பு ரீதியாக மேற்கொள்ளப்பட்ட கணிசமான ஊழல்கள் மீது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
நீதித்துறை செயல்முறைகளில் மேற்கொள்ளப்படும் தேவையற்ற தலையீடுகள், அடிப்படை மனித உரிமை மீறல்கள் மற்றும் அதிகார துஷ்பிரயோகங்களுக்கான பொறுப்புக்கூறல் முயற்சிகளை மேலும் பின்நோக்கி நகர்த்துகின்றது என ITPJ தெரிவித்துள்ளது,
இது தொடர்பான சமர்ப்பிப்புகளில் அரசுக்கு சொந்தமான நிறுவனங்கள் மற்றும் பொது நிதியை தவறாகப் பயன்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இது முழு நாட்டிற்கும் பெரும் நிதி இழப்பை ஏற்படுத்தியதுடன் நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு பங்களிப்பினை வழங்கியுள்ளது.
மேலும், எண்பதுகளின் பிற்பகுதியில் இலங்கையில் பணியமர்த்தப்பட்ட காலகட்டத்தில், மொத்த மனித உரிமை மீறல்கள் மற்றும் பாரிய அட்டூழியக் குற்றங்களுக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறப்படும் அடையாளம் காணப்பட்ட பல முன்னாள் இந்திய அமைதி காக்கும் படை அதிகாரிகளுக்கு விசா தடைக் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
“இன்றுவரை குற்றவியல் பொறுப்புக்கூறல் இல்லாத நிலையில், கடந்த கால மற்றும் தற்போதைய குற்றங்களை தொடர்ந்து ஆவணப்படுத்துவதும், ஆதாரங்களை பகுப்பாய்வு செய்வதும், உண்மையை உறுதிப்படுத்த ஒவ்வொரு வழிகளையும் பயன்படுத்துவதும் இன்றியமையாதது.
ஐக்கிய இராச்சியத்தின் புதிய அரசாங்கம், இலங்கையின் போரின் முடிவில் போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் இலங்கையர்களுக்கு எதிராக மனித உரிமைகள் தினத்தில் தடை விதிக்கும் என நம்புகிறோம்” என சர்வதேச உண்மை மற்றும் நீதி திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யாஸ்மின் சூக்கா தெரிவித்தார்.
ITJP ஆனது 20211 இல் ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் 20221 இல் ஜெனரல் ஜகத் ஜெயசூர்யா மீதான தடை விதிப்பு குறித்த ஆவணங்களை இங்கிலாந்து அரசாங்கத்திடம் சமர்ப்பித்துள்ளது.
அத்துடன் கனடா, அவுஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய அரசாங்கங்களுக்கு ஆவணங்களை அனுப்பியுள்ளது.
2020 ஆம் ஆண்டில், அமெரிக்காவில் ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 7031c பிரிவின் கீழ் சவேந்திர சில்வா பாரிய மனித உரிமை மீறல்களில் பங்களித்தார் என பகிரங்கமாக அறிவிக்கப்பட்டது.
ITJP மற்றொரு பொறுப்புக்கூறல் கருவியாக போர்க்குற்றங்களுக்கான உலகளாவிய வழக்குகளை தாக்கல் செய்வதனை பயன்படுத்துகின்றது.
2017 இல் ITJP முன்னாள் இராணுவத் தளபதி ஜகத் ஜயசூர்யாவிற்கு எதிராக பிரேசில் மற்றும் சிலி ஆகிய நாடுகளில் போர்க்குற்றங்களுகள் தொடர்பில் வழக்குகள் தொடரப்பட்டன.
இதைத் தொடர்ந்து மற்றுமொரு முறைப்பாடு செய்யப்பட்ட போதிலும் அவுஸ்திரேலியாவில் ஃபெடரல் பொலிஸார் அந்த முறைப்பாட்டை விசாரிக்கத் தவறியது.
2019ஆம் ஆண்டு கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக அமெரிக்காவில் சித்திரவதைக்கு ஆளானோர் பாதுகாப்புச் சட்ட வழக்கும், 2022ஆம் ஆண்டு சிங்கப்பூரில் குற்றவியல் முறைப்பாடும் தாக்கல் செய்யப்பட்டது.
இலங்கை இராணுவத்தின் ஓய்வுபெற்ற மூத்த உறுப்பினர் ஒருவருக்கு எதிராக வெளியிடப்படாத அதிகார வரம்பில் மேலும் சர்வதேச ரீதியான வழக்கு ஒன்று விசாரணையில் உள்ளது.
மேலும், இராணுவத்துடன் இணைந்த இலங்கைத் தமிழ் துணை இராணுவக் குழுவைச் சேர்ந்த சந்தேக நபர்களுடன் தொடர்புடைய இரண்டு போர்க்குற்ற சம்பவங்கள் குறித்த முறைப்பாடுகள் இங்கிலாந்தின் பெருநகர காவல்துறைக்கு அனுப்பப்பட்டன.
இதன் அடிப்படையில் அதிகாரிகள் இருவரை கைது செய்ததுடன், இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக தகவல்கள் பொதுமக்களிடம் கோரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.