-2.3 C
Switzerland
Wednesday, January 15, 2025

இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு இந்தியப் பிரதமருக்கு அழைப்பு 

Must Read

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள  ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையிலான  சந்திப்பு இன்று (16) பிற்பகல் பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமான ஹைதராபாத் மாளிகையில்  நடைபெற்றது.

அதனைத்  தொடர்ந்து, இரட்டை வரி விதிப்பைத் தடுப்பது மற்றும் அரசு அதிகாரிகளின் திறன் மேம்பாடு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இந்திய-இலங்கை தலைவர்கள் முன்னிலையில் கைச்சாத்திடப்பட்டன.

இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கையில் இலங்கைக்கு விசேடமான இடமுள்ளது என்பதை தாம் நன்கு அறிவதாக கூட்டுச் செய்தியாளர் சந்திப்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க  நினைவு கூர்ந்தார்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தனது முதலாவது வெளிநாட்டு விஜயத்திற்காக இந்தியாவை தெரிவு செய்தமை தொடர்பில் தாம் மகிழ்ச்சியடைவதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி இதன்போது தெரிவித்தார்.

எதிர்கால நோக்குடன் இருநாடுகளுக்கும் இடையிலான தொடர்புகளை புதிய கோணத்தில் கொண்டு செல்லும் வகையில் பௌதீக, டிஜிட்டல் மற்றும் எரிசக்தி ஆகிய பிரதான தூண்களை பலப்படுத்துவதற்காக இலங்கைக்கு  தொழில்நுட்ப ஆதரவை வழங்குவதும், இரு நாடுகளுக்குமிடையே மின்சார வலையமைப்பு இணைப்பு மற்றும் பல்  உற்பத்தி, பெற்றோலியக் குழாய் இணைப்பை  ஏற்படுத்துவது என்பன குறித்தும் இக் கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது.

இந்திய அபிவிருத்தி ஒத்துழைப்பை தொடர்ந்து முன்னெடுக்கும் வகையில், அநுராதபுரம் புகையிரத பாதை சமிக்ஞைக் கட்டமைப்பு மற்றும் காங்கேசன்துறை துறைமுக புனரமைப்பு என்பவற்றுக்கு உதவி வழங்குவது தொடர்பிலும் இதன் போது நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றது.

இந்தியக் கல்வி ஒத்துழைப்பின் கீழ் அடுத்த வருடம் முதல் யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு மாகாண பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 200 மாணவர்களுக்கு மாதாந்த புலமைப்பரிசில்கள்

வழங்கப்படவுள்ளன. அடுத்த ஐந்து வருடங்களில் 1500 இலங்கை அரச ஊழியர்களுக்கு இந்தியாவில் பயிற்சி அளிக்க இந்தியப் பிரதமர் உடன்பாடு தெரிவித்தார்.

அத்தோடு வீடமைப்பு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் உள்கட்டமைப்பு ,இலங்கையில் விவசாயத்துறை, பால் உற்பத்தித்துறை மற்றும் கடற்றொழில்துறை முன்னேற்றம்  என்பவற்றுக்கு  இந்தியா ஒத்துழைப்பு வழங்கும்.

இந்தியாவின் பாதுகாப்புக்கும் பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் இலங்கை மண்ணை பயன்படுத்த ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை  என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இங்கு தெரிவிதார்.

பாதுகாப்பு ஒத்துழைப்பின்  (Colombo Security Conclave)கீழ் கடல்சார் பாதுகாப்பு, பயங்கரவாத ஒழிப்பு , இணையப் பாதுகாப்பு, கடத்தல் மற்றும் திட்டமிடப்பட்ட குற்றங்களுக்கு எதிராக போராடுதல், மனிதாபிமான உதவி மற்றும் அனர்த்த நிவாரணம் போன்ற விடயங்களில் ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்தும் இந்தக் கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி பகல்போசன விருந்து வழங்கினார்.

இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க  அழைப்பு விடுத்தார்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

MORE ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LATEST ARTICLES