குறைந்த விலையில் மதுபான போத்தல் ஒன்று அறிமுகம் செய்யப்பட உள்ளதாக மதுவரித் திணைக்கள ஆணையாளர் நாயகம் உதய குமார தெரிவித்துள்ளார்.
சட்டவிரோத மதுபான உற்பத்தியை மட்டுப்படுத்தும் நோக்கில் இவ்வாறு குறைந்த விலையில் மதுபானம் விற்பனை செய்யப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
குறைந்த விலையில் மதுபானம் அறிமுகம் செய்யப்படுவதானது மதுவரித் திணைக்களத்தின் வருமானத்தை அதிகரிக்கும் அல்லது மதுபான விற்பனையை மேம்படுத்தும் நோக்கில் அல்ல என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மதுபானம் அருந்தி நோய்வாய்ப்படுவோருக்கான சிகிச்சைகளுக்காக பெருந்தொகை பணம் செலவிடப்படுவதாகவும் இது மதுவரித் திணைக்கள வருமானத்தை விடவும் அதிகம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தரமற்ற மதுபான வகைகளை உட்கொள்வதன் மூலம் இவ்வாறான நிலைமை ஏற்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறைந்த வருமானம் ஈட்டுவோருக்கு நிவாரணம் வழங்கும் வகையில் குறைந்த விலை மதுபானம் அறிமுகம் செய்யுமாறு பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த கோரிக்கையை நிறைவேற்ற முடியுமா என தற்பொழுது மதுவரித் திணைக்களம் ஆராய்ந்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறைந்த விலையில் மதுபான விற்பனைக்கு நிதி அமைச்சு அனுமதி வழங்கினால், அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களம் உள்ளிட்ட அனுமதி பெறக்கூடிய அனைத்து நிறுவனங்களிடமிருந்தும் அனுமதி பெற்றுக்கொண்டு அடுத்த ஆண்டு முதல் காலாண்டில் குறைந்த விலையில் மதுபான போத்தல்களை அறிமுகம் செய்ய முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் சட்டவிரோத மதுபான உற்பத்தியை தடுக்கும் சுற்றி வளைப்புக்கள் அதிகரிக்கப்பட உள்ளதாக மதுவரித் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் உதய குமார தெரிவித்துள்ளார்.