கிராமிய அபிவிருத்தி அமைச்சர் உபாலி பன்னிலவின் நாடாளுமன்ற உறுப்புரிமை தொடர்பில் சர்ச்சை எழுந்துள்ளது.
அமைச்சர் உபாலி நாடாளுமன்ற உறுப்புரிமைக்கு பொருத்தமற்றவர் என தெரிவித்து நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
உபாலியின் நாடாளுமன்ற உறுப்புரிமையை ரத்து செய்ய ரீட் உத்தரவு பிறப்பிக்குமாறு நீதிமன்றில் கோரப்பட்டுள்ளது.
சமூக செயற்பாட்டாளரான ஓசல ஹேரத் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.
பல்கலைக்கழக விரிவுரையாளர் பதவியை ராஜினாமா செய்யாமல் உபாலி பன்னில நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டியுள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளார்.
அரசாங்க ஊழியராக கடமையாற்றிக் கொண்டே தேர்தலில் போட்டியிட்டுள்ளதாக மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
உபாலி பன்னில ருஹுனு பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளராக கடமையாற்றிக் கொண்டே தேர்தலில் போட்டியிட்டதாகவும் இது சட்டவிரோதமானது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கட்சி உறுப்பினர்களின் கல்வித் தகுதிகள் உள்ளிட்ட இவ்வாறான பல்வேறு சவால்களை அண்மைய நாட்களில் எதிர்நோக்கி வருகின்றது.