யாழ்ப்பாணம் நெடுந்தீவு பகுதியிலிருந்து கடல் வழியாக பயணிகளை ஏற்றிச் சென்ற படகு ஒன்று இயந்திர கோளாறுக்கு உள்ளாகியுள்ளது.
இந்த இயந்திரக் கோளாறினால் பாதிக்கப்பட்ட பயணிகளை மீன்பிடி படகுகள் மூலம் பிரதேச மக்கள் மீட்டு உள்ளனர்.
நெடுந்தீவிலிருந்து குறிக்கட்டுவான் வரையில் இந்தப் படகு பயணித்துள்ளது.
இந்த படகில் சுமார் 60 பயணிகள் பயணம் செய்துள்ளனர்.
பயணத்தின் நடுவில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டதனால் தொடர்ந்து பயணம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டதாகவும் மக்கள் பீதி அடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
படகில் பயணித்தவர்கள் கூச்சலிட்டதை தொடர்ந்து அருகாமையில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீன்பிடி படகில் இருந்தவர்கள் ஏனைய சில மீன்பிடி படகுகளுடன் சென்று நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த பயணிகளை மீட்டுள்ளனர்.
பயணிகள் அனைவரும் எவ்வித காயங்களும் இன்றி பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
தம்மை பாதுகாப்பான முறையில் கரைக்கு அழைத்து வந்த மீனவர்களுக்கு, பயணிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.