-2.3 C
Switzerland
Wednesday, January 15, 2025

“எங்களை மனிதர்களாக நடத்துங்கள் ” இந்திய மீனவர்களின் கோரிக்கை

Must Read

தங்களை மனிதர்களாக நடத்துமாறு இந்திய மீனவர்கள் இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த 2024ம் ஆண்டில் பெரும் எண்ணிக்கையிலான இந்திய கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டதுடன் அதிகளவான படகுகளும் கைப்பற்றப்பட்டிருந்தன.

இலங்கைக் கடற்படையினர் மனிதாபிமானமற்ற முறையில் தம்மை நடாத்துவதாகவும், துன்புறுத்துவதாகவும் இந்திய கடற்றொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இலங்கைக் கடற்படையினர் துப்பாக்கி முனையில் தங்களை கைது செய்ததாக பாம்பனைச் சேர்ந்த 23 வயதான அசோகா தெரிவிக்கின்றார்.

இரும்பு கம்பிகள், பொல்லுகளைக் கொண்டு தங்களை இலங்கை கடற்படையினர் கொடூரமாக தாக்கியதாக கூறுகின்றார்.

தங்கள் அனைவரையும் விலங்கிட்டு கைது செய்து சங்கிலிகளால் கட்டி இழுத்துச் சென்றதாகவும், இதனால் தங்களது தோல் பாதிக்கப்பட்டதாகவும், சங்கிலியிடப்பட்டதனால் ஒருவர் அசைந்தாலும் ஏனையவர்கள் விழுந்து விடக்கூடிய அபாயம் காணப்பட்டதாகவும் தெரிவிக்கின்றார்.

காரைநகரில் அமைந்துள்ள கடற்படை முகாமில் 15 நாட்கள் எவ்வித அடிப்படை வசதிகளும் இன்றி தடுத்து வைக்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கின்றார்.

15 நாட்களின் பின்னர் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தைச் சேர்ந்தவர்கள் தங்களுக்கு துவாய்களும் சவர்க்காரமும் வழங்கியதாக குறிப்பிடுகின்றார்.

ஒரு மாத காலம் தடுத்து வைக்கப்பட்டதன் பின்னர் தங்களை விடுவித்ததாக தெரிவிக்கின்றார்.

கடந்த 2024ம் ஆண்டில் 535 இந்திய கடற்றொழிலாளர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர். கடந்த 2023ம் ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது இது இரண்டு மடங்காகும்.

கடந்த நவம்பர் மாதம் 29ம் திகதி வரையில் 149 இந்திய கடற்றொழிலாளர்கள் இலங்கை சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் 198 மீன்பிடிப் படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இலங்கை அதிகாரிகள் தம்மை குற்றவாளிகளைப் போன்று நடத்துவதாக கடந்த செப்டம்பர் மாதம் கைது செய்யப்பட்ட கடற்றொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அவர்கள் அனைவருக்கும் இலங்கை ரூபாவில் 50000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த தொகையை செலுத்தியதன் பின்னரே அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

தங்களது பாதுகாப்பினை மத்திய அரசாங்கம் உறுதி செய்யத் தவறியுள்ளதாகக் குற்றம் சுமத்தி தமிழக மீனவர்கள் எதிர்ப்பை வெளியிட்டனர்.

இதேவேளை, மேலும் மூன்று இந்திய கடற்றொழிலாளர்களுக்கு ஆறு மாத சிறைத்தண்டனையும் அபராதத்தையும் இலங்கை அரசாங்கம் விதித்திருந்தது.

1974ம் ஆண்டு கச்சத்தீவு இலங்கைக்கு வழங்கப்பட்டது, 1976ம் ஆண்டு முதல் இந்திய மீனவர்கள் குறித்த பகுதியில் மீன்பிடியில் ஈடுபட தடை விதிக்கப்பட்டது.

தற்பொழுது அதிகளவான இந்திய மீனவர்கள் கைதாகும் இடமாக கச்சத்தீவு பகுதி காணப்படுகின்றது.

வாழ்வாதாரத்தைக் கருத்திற்கொண்டே பாம்பன் பகுதியைச் சேர்ந்த இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்பிற்குள் பிரவேசிக்கின்றனர்.

காலநிலை மாற்றம், பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் இயந்திரப் படகு பயன்பாடு காரணமாக இந்திய கடற்பரப்பில் மீன்வளம் வெகுவாக குறைவடைந்து செல்வதாக கடற்றொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இயந்திரப் படகுகள் கடல் படுகையை சேதப்படுத்துவதாகவும் இதனால் முருகைக் கற்கள் உள்ளிட்ட கடல் வளம் வெகுவாக அழிவடைவதாக தெரிவிக்கப்படுகின்றது.

ட்ரோலர் படகுகளில் பயன்படுத்தப்படும் மீன்பிடி வலைகள் மற்றும் எரிபொருள் கழிவுகள் காரணமாக மீன் வளம் அழிவடைவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்திய கடற்பகுதியில் பாறைகள் அதிகளவில் காணப்படுவதாலும் கரையிலிருந்து கடற்பகுதியின் தூரம் வெகு குறைவு என்பதனாலும் மீன்பிடிப்பதற்கான சந்தர்ப்பம் குறைவாக காணப்படுகின்றது.

இதனால் மீனவர்கள் எல்லையைக் கடந்து மீன்பிடியில் ஈடுபடுகின்றனர்.

கைது செய்யப்படலாம் அல்லது உயிரிழக்க நேரிடலாம் என தெரிந்தே இந்திய கடற்றொழிலாளர்கள் எல்லைத்தாண்டி மீன்பிடியில் ஈடுபடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மீன்கள் இன்றி கரை திரும்ப முடியாது என்ற காரணத்தினால் மீனவர்கள் இவ்வாறு எல்லை தாண்டி ஆபத்தான வகையில் மீன்பிடிப்பதாக ராமநாதபுரம் இயந்திரப் படகு மீனவர் சங்கத்தின் தலைவர் ஜேசுராஜ் குறிப்பிடுகின்றார்.

இலங்கைக் கடற்பரப்பிற்குள் பிரவேசித்து மீன்பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மீனவர்கள் கடலுக்குச் செல்வதில்லை என அவர் குறிப்பிடுகின்றார்.

கடல் அலை, இருள் மற்றும் மழை காரணமாக அதிகளவான சந்தர்ப்பங்களில் இலங்கைக் கடற்பரப்பிற்குள் செல்ல நேரிடுவதாக அவர் தெரிவிக்கின்றார்.

1950கள் முதல் இந்தியாவில் இயந்திரப் படகு பயன்பாட்டுடனான மீன்பிடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதானால் வேகமாக முருகைக் கற்கள் உள்ளிட்ட முக்கிய கடல் வளங்கள் அழிந்துள்ளன.

மறுபுறத்தில் இலங்கையில் செழிப்பான மீன்வளம் காணப்படுகின்றது. இலங்கையின் கடல் வளமும் நல்ல நிலையில் காணப்படுகின்றது. இதனால் இலங்கையில் மீன்பிடியில் ஈடுபடுவதற்கான சாத்தியங்கள் அதிகளவில் காணப்படுகின்றது.

இயந்திரப் படகு பயன்பாட்டினால் இந்தியாவைப் போன்றே இலங்கையிலும் மீன்வளம் அழிந்து விடக் கூடும் என இலங்கைக் கடற்றொழிலாளர்கள் அஞ்சுகின்றனர்.

இதன் காரணமாக இரு நாட்டு மீனவர்களுக்கும் இடையில் மோதல்கள் இடம்பெறுகின்றன என ஜேசுராஜ் தெரிவிக்கின்றார்.

இந்திய மீனவர்களை விடுதலை செய்வதற்கு மத்திய அரசாங்கம் இலங்கையுடன் பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் மீனவர்களின் வாழ்நாள் முதலீடான படகுகளை விடுவித்துக்கொள்ள முடிவதில்லை என ஜேசுராஜ் குறிப்பிடுகின்றார்.

கடல்வாழ் உயிரினங்களுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் மீன்பிடியில் ஈடுபடும் காரணத்தினால் சில வகை கடல் உணவுகளை இந்தியாவிடமிருந்து கொள்வனவு செய்வதில்லை என அமெரிக்கா அறிவித்திருந்தது.

கடந்த 2019ம் ஆண்டில் இது தொடர்பிலான தடையொன்றையும் அமெரிக்கா விதித்திருந்தது.

அமெரிக்காவின் தடை விதிப்பு காரணமாக 500 மில்லியன் டொலர் வருமானத்தை இழக்க நேரிட்டுள்ளதாக இந்திய கடல் வள உற்பத்தி ஏற்றுமதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவிக்கின்றது.

இந்த தடையினால் ஏனைய நாடுகளும் இறால்களை குறைந்த விலையில் கொள்வனவு செய்வதற்கான பேரம் பேசல்களில் ஈடுபட்டன.

இந்தியாவில் டீசல் விலை அதிகரிப்பு மீனவர்களை பாதித்துள்ளது. ஒரு லீற்றர் டீல் 50 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட போது 700 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ கிராம் இறாலின் விலையானது ஒரு லீற்றர் டீசல் 100 ரூபாவிற்கு விற்பனை செய்யும் போது 400 முதல் 500 ரூபாவாக குறைவடைந்துள்ளது என ஜேசுராஜ் தெரிவிக்கின்றார்.

காலநிலை மாற்றம் மற்றும் கடல் மாசடைதல் என்பனவே இந்திய கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் மிகப்பெரிய சவால் என அவர் குறிப்பிடுகின்றார்.

ட்ரோலர் படகுகளை விடவும் பிளாஸ்டிக் கழிவுகளினால் கடல் வளம் அழிவடைந்துள்ளது என அவர் குறிப்பிடுகின்றார்.

பத்து ஆண்டுகளுக்கு முன்னதாக வலை விரித்தால் கடலில் மீன்கள் மட்டுமே கிடைக்கும் எனவும் தற்பொழுது வலை விரித்தால் பிளாஸ்டிக் கழிவுகளை விட குறைவான மீன்களே கிடைக்கப்பெறுவதாகவும் தெரிவிக்கின்றார்.

காலநிலை மாற்றம் புயல் காற்று போன்ற பல்வேறு ஏதுக்களினால் இந்திய கடற்றொழிலாளர்கள் தங்களது தொழிலை முன்னெடுப்பதில் கடும் சவால்களை எதிர்நோக்க நேரிடுவதாகத் தெரிவிக்கின்றனர்.

ஆண் கடற்றொழிலாளர்களுக்கு மீன்கள் கிடைக்காத காரணத்தினால் பெண்கள் தற்பொழுது ஆபத்தான கடற்றொழில்களில் ஈடுபடுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வித பாதுகாப்பு அங்கிகளும் அணியாது சுமார் 12 அடி வரையிலான ஆழத்திற்கு சென்று பெண்கள் கடற்பாசிகளை சேகரித்து விற்பனை செய்து வாழ்வாதாரத்தை முன்னெடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்திய கடற்வளத்தை பாதுகாப்பதற்கான முனைப்புக்களை சிலர் முன்னெடுக்கத் தொடங்கியுள்ளனர்.

கைதுகள், மனிதாபிமானமற்ற வகையில் இலங்கையில் நடத்தப்படுதல், மீன்வளமின்மை போன்ற பல காரணிகளினால் மீனவர்கள் தற்பொழுது தொழிலை விட்டு விலகிச் செல்லத் தொடங்கியுள்ளனர்.

தமது எதிர்கால சந்ததியினர் மீன்பிடித்தொழிலில் ஈடுபடக்கூடாது என இந்திய மீனவர்கள் விரும்பும் நிலைமை உருவாகியுள்ளது.

நன்றி அல்ஜசீரா : தமிழில்: tamilnews.ch

MORE ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LATEST ARTICLES