ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பல்வேறு சவால்களை எதிர்நோக்கி வருகின்றது.
அண்மையில் நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலிலும் நாடாளுமன்ற தேர்தலிலும் தேசிய மக்கள் சக்தி வெற்றியீட்டியது.
குறிப்பாக நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு மக்கள் பாரிய ஆணையை வழங்கி இருந்தனர்.
அனுர தலைமையிலான அரசாங்கம் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் சவால்களை எதிர்நோக்கி வருகின்றது.
பொருட்களின் விலைகளை குறைத்தல், தட்டுப்பாடு இன்றி பொருட்களை விநியோகம் செய்தல், ஊழல் மோசடிகளை தடுத்து நிறுத்தல், அரசாங்க நிறுவனங்களில் செயல் திறனை அதிகரித்தல், வீண் விரயத்தை கட்டுப்படுத்தல் போன்ற பல்வேறு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டிருந்தன.
எனினும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுக் கொண்டு கடந்துள்ள சில மாதங்களில் ஊழல் மோசடிகள் தொடர்பான நடவடிக்கைகள் மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
மேலும் சர்வதேச நாணய நிதியத்துடனான இணக்கப்பாடுகள், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சிக் காலத்தில் முன்னெடுக்கப்பட்ட இணக்கப்பாடுகளின் அடிப்படையில் தற்போதைய அரசாங்கமும் பயணிக்க நேரிட்டுள்ளது.
அரிசிக்கு தட்டுப்பாட்டு நிலை ஏற்பட்டுள்ளது, அரிசி ஆலைகளில் அரிசி உற்பத்தி குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாடு தழுவிய ரீதியில் அரசாங்கம் முன்னெடுத்து வரும் கிளீன் ஸ்ரீலங்கா என்ற திட்டத்திற்கும் எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன.
இதுவரை கால ஆட்சியில் தேசிய மக்கள் சக்தி பல்வேறு சவால்களை எதிர் நோக்க நேரிட்டுள்ளது.
எதிர்கால திட்டங்களை வெற்றிகரமாக முன்னெடுக்க தவறினால் அது மக்கள் மனதில் மாற்றங்களை ஏற்படுத்தும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறிப்பாக இலங்கையின் அரசியல் கலாச்சாரத்தையே அடியோடு மக்கள் வெறுக்கும் ஓர் நிலை உருவாகும் அபாயம் காணப்படுகின்றது.
பல்வேறு தேர்தல் காலங்களில் பல்வேறு வாக்குறுதிகள் அளிப்பதும் பின்னர் அவற்றை ஆட்சி ஏற்றதன் பின்னர் நிறைவேற்ற தவறுவதும் இலங்கையில் கடந்த 76 ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள ஒர் விடயமாக காப்படுகினற்து.
இதே நிலைமை அனுர அரசாங்கத்திலும் நீடித்தால் மக்கள் அரசியல் தொடர்பான தங்களது எதிர்பார்ப்புகளையும் நம்பிக்கைகளையும் முற்றுமுழுதாக இழக்க நேரிடும் என்பதில் ஐயமில்லை.