ஈரானிய சிறைச்சாலை ஒன்றில் சுவிட்சர்லாந்து பிரஜை ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
ஈரான் அரசாங்கத்திற்கு எதிராக துரோகச் செயலில் ஈடுபட்டதாக குறித்த நபருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டு இருந்தது.
மரணம் தொடர்பில் ஈரானிய அதிகாரிகள் சுவிட்சர்லாந்து வெளிவிவகார அமைச்சுக்கு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
ஈரானின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள செம்நான் சிறைச்சாலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அரச விரோத செயலில் ஈடுபட்டார் எனவும் உளவுப் பணியில் ஈடுபட்டார் எனவும் குற்றம் சுமத்தி தடுத்து வைக்கப்பட்டிருந்த குறித்த நபர் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஈரான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறான ஒரு பின்னணியில் குறித்த நபர் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
ஈரானில் ஐரோப்பிய பிரஜைகள் சிலர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் சிலருக்கு ஈரானிய கடவுச்சீட்டுக்கள் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
ஈரானிய அரசாங்கம் வெளிநாட்டு பிரஜைகளை அரசியல் பணயமாக வைத்துக் கொள்வதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
எவ்வாறெனினும், இந்த குற்றச்சாட்டுகளை ஈரான் மறுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.