காசா போர் நிறுத்தத்தின் எதிரொலியாக கைதிகள் விடுதலை செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதுவரையில் இஸ்ரேலிய அரசாங்கம் சுமார் 90 பலஸ்தீனிய கைதிகளை விடுதலை செய்துள்ளது.
இதேவேளை, ஹமாஸ் போராளிகள் இஸ்ரேலிய பணய கைதிகள் மூவரை விடுதலை செய்துள்ளனர்.
நேற்றைய தினம் முதல் காசா பிராந்தியத்தில் போர் நிறுத்தம் அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எதிர்வரும் ஆறு வார கால பகுதிக்குள் முதல் கட்டமாக ஹமாஸ் போராளிகள் 33 இஸ்ரேலிய பணய கைதிகளை விடுதலை செய்ய உள்ளனர்.
இதேவேளை, இடம்பெயர்ந்து வாழ்ந்து வந்த பலஸ்தீன பிரஜைகள் தங்கள் சொந்த இடங்களுக்கு திரும்பத் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
காசாவில் இடம் பெற்று வந்த போர் காரணமாக அந்தப் பகுதியில் சுமார் 92 வீதமான வீடுகள் சேதமடைந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு தெரிவித்துள்ளது.
போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து காசாவின் சில பகுதிகள் இருந்து இஸ்ரேலிய படையினர் வாபஸ் பெற்றுக் கொள்ள தொடங்கியுள்ளனர் என அறிவிக்கப்படுகிறது.
இதேவேளை, காசா பிராந்தியத்தில் போர் நிறுத்தம் அமலுக்கு வந்தமை தாம் தேர்தலில் வெற்றி ஈட்டியதன் ஓர் வெளிப்பாடு என அமெரிக்க புதிய ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் அவர் பதவிப்பிரமாணம் செய்து கொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.