சட்டவிரோதமான முறையில் வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள சொத்துக்களை மீட்பதற்கு உதவுவதாக சுவிட்சர்லாந்து அறிவித்துள்ளது.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு இது தொடர்பிலான தகவல்களை வெளியிட்டுள்ளது.
இலங்கை மற்றும் மாலைதீவிற்கான சுவிட்சர்லாந்து தூதுவர் டொக்டர் சிரி வல்மட் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார்.
சுவிட்சர்லாந்து தூதுவர் வல்மட், இலங்கை ஜனாதிபதியின் செயலாளர் டொக்டர் நந்திக்க செனத் குமநாயக்கவை சந்தித்துள்ளார்.
சட்டவிரோதமான முறையில் வெளிநாடுகளில் பதுக்கப்பட்ட சொத்துக்களை மீட்பது குறித்த சர்வதேச ரீதியான நடவடிக்கைகள் குறித்து சுவிஸ் தூதுவர் விளக்கியுள்ளார்.
இவ்வாறான நடவடிக்கைகளுக்கு தேவையான ஆலோசனை வழிகாட்டல்களையும் வளங்களையும் வழங்கத் தயார் என சுவிஸ் தூதுவர் தெரிவித்துள்ளார்.
கிளீன் சிறிலங்கா உள்ளிட்ட அரசாங்கத்தின் முதன்மைத் திட்டங்களுக்கு நிதி மற்றும் தொழில்நுட்ப ரீதியான உதவிகளை வழங்கத் தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துதல் மற்றும் வட மாகாண அபிவிருத்தி போன்றவற்றுக்கும் உதவுவதாக சுவிட்சர்லாந்து உறுதியளித்துள்ளது.