அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் இடையில் கடும் முரண்பாட்டு நிலைமை உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வர்த்தக விவகாரங்களில் இவ்வாறு இரு நாடுகளுக்கும் இடையில் கடும் முரண்பாட்டு நிலை உருவாகியுள்ளது.
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கனடா மீது வரி விதிப்பதாக அறிவித்துள்ளார்.
நேற்றைய தினம் முதல் கனடாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் மீது 25 வீத வரி விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வரி விதிப்பு நடவடிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் கனடாவும் அமெரிக்க பொருட்கள் மீது வரி விதிப்பதாக அறிவித்துள்ளது.
கனடாவின் ஏற்றுமதி பொருள்கள் மீதான வரி விதிப்பின் காரணமாக கனடா பாரிய பொருளாதார நெருக்கடிகளை எதிர் நோக்க நேரிடும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறிப்பாக பொருட்களின் விலைகள் உயர்வடையும் எனவும் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் தொழில் வாய்ப்புகளை இழக்க நேரிடும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த பொருளாதார இழப்புக்கள் காரணமாக கனடிய அரசாங்கம் அமெரிக்காவின் பொருட்கள் மீது வரி விதிப்பதாக அறிவித்துள்ளது.
அமெரிக்காவில் இருந்து கனடாவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் சுமார் 155 பில்லியன் டாலர் பெறுமதியான பொருட்கள் மீது 25 வீத வரி விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இந்த இரு தரப்பிற்கும் இடையிலான வரி விதிப்பு காரணமாக நாடுகளுக்கு இடையில் பொருளாதார போர்முண்டு உள்ளதாகவும் இரு தரப்பிற்கு இடையிலான உறவுகளில் கடும் விரிசல் நிலை உருவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கனடிய அரசாங்கம் சட்டவிரோத குடியேறிகள் அமெரிக்காவிற்குள் பிரவேசிப்பதனை தடுக்கவில்லை எனவும் சில பிழையான பொருளாதார கொள்கைகளை பின்பற்றி வருவதாகவும் டொனால்ட் டிரம்ப் கடுமையான விமர்சனங்களை செய்து வந்திருந்தார்.
இவ்வாறான ஒரு பின்னணியிலேயே வரி விதிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.