ஐரோப்பிய மதுபானங்களுக்கு 200% வரி விதிக்க முடிவு செய்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா மீது ஐரோப்பிய ஒன்றியம் கடந்த புதன்கிழமை 50% வரியை விதித்ததற்கு பதிலடியாக இவ்வாறு மதுபான வகைகளுக்கு வரி விதிக்கப் போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து மதுபானங்களுக்கும் 200% வரி விதிக்க இருப்பதாக டிரம்ப் எச்சரித்துள்ளார்.
“இந்த வரி உடனடியாக நீக்கப்படாவிட்டால், பிரான்ஸ் மற்றும் மற்ற ஐரோப்பிய நாடுகளிலிருந்து வரும் அனைத்து வைன்கள், ஷாம்பெய்ன் மற்றும் மதுபானங்களுக்கு 200% வரி விதிக்கப்படும். இது அமெரிக்காவின் வைன் மற்றும் ஷாம்பெய்ன் தொழில்களுக்கு பெரும் நன்மையாக இருக்கும்,” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வர்த்தக மோதல் 36 மணிநேரத்திற்குள் கடுமையாக மோசமான நிலைக்கு மாறியுள்ளது.
டிரம்ப் நிர்வாகம் புதன்கிழமை முதல் அமலாகும் வகையில் அலுமினியம் மற்றும் உருக்கு பொருட்களுக்கு 25% வரி விதித்ததைத் தொடர்ந்து, ஐரோப்பிய ஒன்றியம் உடனடியாக பதிலடி கொடுத்து, அமெரிக்க பொருட்கள் மீது €26 பில்லியன் (அமெரிக்க டாலர் 28 பில்லியன்) மதிப்புள்ள புதிய வரிகளை விதித்தது.
இந்த பதிலடி நடவடிக்கையில் படகுகள், மற்றும் மோட்டார் சைக்கிள்கள் ஆகியவற்றுக்கு கூடுதல் வரிகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்த வரிகள் ஏப்ரல் மாதம் அமலுக்கு வரவுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.