ரஷ்யா-உக்ரைன் போருக்கு முடிவுகாண பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ள தரப்பினர் “சில சொத்துகளைப் பகிர்ந்து கொள்ளும்” விவகாரம் பற்றியும் ஏற்கனவே கலந்தாலோசித்துவிட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.
இன்றைய தினம் வெள்ளை மாளிகை திரும்பும் வழியில் Air Force One விமானத்தில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், நாளைய தினம் ரஷ்ய விளாடிமிர் புடினுடன் பேச இருப்பதாக தெரிவித்தார்.
“நாங்கள் ரஷ்யாவுடன் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளோம். செவ்வாய்க்கிழமை புடினுடன் பேசுவேன். அது ஒரு முக்கிய வாய்ப்பு. வாராந்திய விடுமுறையில் பல முக்கிய பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளன,” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
“நிலங்கள் குறித்து பேசுகிறோம். போருக்கு முன்பிருந்த நிலைமையைக் காட்டிலும் நிலபரப்பில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. மின் நிலையங்கள் போன்ற முக்கிய சொத்துகளின் உரிமைகள் தொடர்பாகவும் பேச வேண்டும்” என டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அத்துடன், “உக்ரைனும், ரஷ்யாவும் ஏற்கனவே பல அம்சங்களை விவாதித்துள்ளன. சில சொத்துகளைப் பகிர்ந்து கொள்வதற்கான பேச்சுவார்த்தை முன்னேற்ற நிலையை அடைந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த வாரம், அமெரிக்கா முன்மொழிந்த 30 நாட்கள் போர்நிறுத்தத்துக்கு உக்ரைன் சம்மதித்துள்ளதாக டிரம்ப் தெரிவித்தார்.
இதன் மூலம், போர் முடிவுக்குச் செல்லும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளதாகவும் கூறியிருந்தார்.
இதேவேளை போர் நிறுத்த முன்மொழிவை ஏற்றுக்கொண்டாலும் உக்ரைனின் சில நடவடிக்கைகள் குறித்து புடின் கடும் விமர்சனங்களை வெளியிட்டுள்ளார்.
அமெரிக்க, ரஷ்ய, உக்ரைன் அதிகாரிகள் இடையே பேச்சுவார்த்தைகள் தொடரும் என்றும், அமெரிக்க அதிகாரிகள் விரைவில் ரஷ்யா சென்று மத்தியஸ்த பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார்கள் என்றும் கூறப்படுகிறது.