அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தலைமையிலான நிர்வாகம், கியூபா, ஹைத்தி, நிகராகுவா மற்றும் வெனிசுலா நாடுகளின் 5,30,000 குடியேறிகளுக்கு வழங்கப்பட்ட தற்காலிக சட்ட அனுமதியை ரத்து செய்யும் என அறிவித்துள்ளது.
ஏப்ரல் 24 முதல் அமலுக்கு வரும் இந்த நடவடிக்கையின் மூலம், இந்த குடியேறிகளுக்காக முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடன் வழங்கிய இரண்டு ஆண்டு கால “பரோல்” (Parole) அனுமதி நிறுத்தப்படுகின்றது.
இந்த அனுமதி அமெரிக்காவுக்கு விமானம் மூலம் செல்லக் கூடிய அமெரிக்க அனுசரணையாளர்கள் (sponsors) உடைய குடியேறிகளுக்கு வழங்கப்பட்டிருந்தது.
அமெரிக்க-மெக்ஸிகோ எல்லை கடத்தல்களை கட்டுப்படுத்துவது என்பது டிரம்ப் நிர்வாகத்தின் நோக்கமாக அமைந்துள்ளது.
இந்த முடிவால், பலரும் நாட்டிலிருந்து வெளியேற்றப்படுவதற்கான ஆபத்துக்குள்ளாவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
“விரைவான வெளியேற்றம்” (Expedited Removal) என்ற சட்டத்தை பயன்படுத்தி, இரண்டு ஆண்டுகளுக்கு குறைவாக அமெரிக்காவில் வசிக்கும் குடியேறிகளை விரைவாக நாடு கடத்தலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
ஜனவரி 20 அன்று வெளியிடப்பட்ட நிர்வாக ஆணையில், ஜனாதிபதி டிரம்ப், சட்டபூர்வ குடியேறுதலுக்கான பரோல் திட்டங்கள் மத்திய அரசின் சட்ட வரம்புகளை மீறுகின்றன என கூறி, அவற்றை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மார்ச் 6, டிரம்ப், உக்ரைனிய குடியேறிகளுக்கு வழங்கப்பட்ட “பரோல்” அனுமதி குறித்து விரைவில் முடிவெடுப்பதாக அறிவித்துள்ளார்.
ரஷ்யா-உக்ரைன் போர் காரணமாக 2,40,000 உக்ரைனியர்கள் அமெரிக்காவில் தங்க அனுமதி பெற்றிருந்தனர்.
முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடன் 2022 ஆம் ஆண்டு வெனிசுலாவிற்கு குடியேற்ற அனுமதி வழங்கியதை தொடக்கமாக, 2023 ஆம் ஆண்டு கியூபா, ஹைத்தி மற்றும் நிகராகுவா குடியேறிகளுக்கும் இதை விரிவாக்கியிருந்தார்.
இதன் நோக்கம் – அமெரிக்க-மெக்ஸிகோ எல்லையில் சட்டவிரோத குடியேற்றம் அதிகரித்ததை கட்டுப்படுத்த வேண்டும் என்பதேயாகும் என தெரிவிக்கப்படுகின்றது.
ஆனால், டிரம்ப் நிர்வாகம் இந்த திட்டங்களை சட்டபூர்வமாக செல்லாதவை எனக் கருதி, அரசு நிதி ஆதரவுடன் குடியேற்றப்பட்டவர்களை விரைவில் நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த முடிவு அமெரிக்காவில் வாழும் புலம்பெயர்ந்த மக்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்படுகின்றது.