அமெரிக்காவிற்குள் இறக்குமதி செய்யப்படும் மின்னணு சாதனங்களுக்கு, ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்திருந்த வரிகளிலிருந்து விலக்கு வழங்கப்படுவதாக, அமெரிக்க சுங்க மற்றும் எல்லை பாதுகாப்பு நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
இதன் படி, ஸ்மார்ட்போன்கள், கணினி மானிட்டர்கள் மற்றும் பல்வேறு மின்னணு பாகங்கள் போன்ற பொருட்கள் இப்போது வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஏப்ரல் 5-ஆம் திகதிக்குப் பிறகு இறக்குமதியான அல்லது கிடங்குகளில் இருந்து வெளியேற்றப்படும் பொருட்களுக்கு இந்த விலக்கு நடைமுறையில் வந்துவிட்டது.
டிரம்ப் நிர்வாகம் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு குறைந்தபட்சமாக 145% வரி விதிப்பை அமல்படுத்திய பின்னணியில், இந்த விலக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. குறிப்பாக, ஐபோன் உள்ளிட்ட பல்வேறு சாதனங்களை சீனாவில் தயாரிக்கும் ஆப்பிள் நிறுவனத்திற்கு இது பெரிய நெருக்கடியாக அமைந்திருக்கிறது.
வெட்புஷ் செக்யூரிடிஸ் (Wedbush Securities) நிறுவனத்தின் மதிப்பீட்டின் பிரகாரம், ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் தயாரிப்பு மற்றும் அசம்பிளி பணிகளின் சுமார் 90% சீனாவில் நடைபெறுகிறது.
இந்த வரி விலக்கு, “தொழில்நுட்பத்துறை முதலீட்டாளர்களுக்காக கிடைத்த மிகச் சிறந்த செய்தி” என வெட்புஷ் அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
“ஆப்பிள், நிவிடியா, மைக்ரோசாப்ட் மற்றும் பரந்தளவில் டெக் துறையிலுள்ள நிறுவனங்கள் தங்கள் சுவாசத்தை இப்போது ஓரளவுக்காவது திடம்செய்ய முடிகிறது. சீனா-அமெரிக்கா வரி போர் விவாதங்களில் இது ஒரு முக்கிய முன்னேற்றம்,” எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த வரி விலக்கு அறிவிப்புக்குப் பிறகு, ஆசியாவின் செமிகாண்டக்டர் நிறுவனங்களான TSMC (தைவான்), சாம்சங் மற்றும் SK Hynix ஆகியவற் குறித்த நம்பிக்கையும் அதிகரித்துள்ளது, ஏனெனில் மைக்ரோசிப், செமிகாண்டக்டர் உள்ளிட்ட பாகங்களை சீனாவில் மற்றும் ஆசியாவில் குறைந்த செலவில் தயாரிப்பது பெரும்பாலான நிறுவனங்களின் வழக்கமாக உள்ளது.
முன்னதாக Nintendo நிறுவனமும், அதன் ‘Switch 2’ கேமிங் கன்சோலுக்கான முன்பதிவுகளை தற்காலிகமாக ஒத்திவைத்தது. தரப்புகளின் கணிப்புப்படி, வரிகளால் இதன் விலை $450-ல் இருந்து $600-க்கு உயர வாய்ப்பு இருந்தது.
டிரம்ப் நிர்வாகத்தின் திட்டப்படி, இந்த வரிகள் அமெரிக்க உற்பத்தியை ஊக்குவித்து, வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்று வலியுறுத்தப்பட்டாலும், குறிப்பிட்ட சில உயர் தொழில்நுட்ப பொருட்கள் அமெரிக்காவில் தயாரிக்க முடியாத சூழல் காரணமாக, கடைசி நுகர்வோருக்கே அதிக சுமை ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.