சீனாவின் பெய்ஜிங் மற்றும் வட சீனாவின் பல பகுதிகளில் சனிக்கிழமை கடும் காற்று வீசியதால், நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டு, சில முக்கியமான தொடருந்துப் பாதைகள் சேவையை நிறுத்தின.
சனிக்கிழமை காலை 11:30 அளவில், பெய்ஜிங்கின் இரண்டு முக்கிய விமான நிலையங்களில் 838 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்தது.
மணிக்கு 150 கிலோமீட்டர் (93 மைல்கள்) வேகத்தில் வீசும் கடும் காற்று கடந்த 50 ஆண்டுகளில் பெய்ஜிங்கில் பதிவான மிக வலிமையான காற்று என தெரிவிக்கப்படுகின்றது.
இந்தக் காற்று வார இறுதி முழுவதும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் சுற்றுலா தலங்கள் மற்றும் வரலாற்றுப் புகழ் பெற்ற இடங்கள் மூடப்பட்டுள்ளன.
வெள்ளிக்கிழமை முதல், மக்களை வீடுகளுக்குள் தங்கும்படி அதிகாரிகள் அறிவுறுத்தியிருந்தனர்.
“உடல் எடை 50 கிலோவிற்கும் குறைவாக இருப்பவர்கள் காற்றால் எளிதில் தூக்கப்பட்டு செல்லலாம்” என சில அரச ஊடகங்கள் எச்சரிக்கை செய்தன.
விமான நிலைய எக்ஸ்பிரஸ் பாதையை உள்ளடக்கிய மெட்ரோ சேவைகள் மற்றும் சில அதி வேக ரயில் பாதைகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
பூங்காக்களும் மூடப்பட்டன; பழைய மரங்களை பாதுகாக்க பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டும், இதுவரை சுமார் 300 மரங்கள் வீழ்ந்துள்ளன.
பல வாகனங்கள் சேதமடைந்துள்ளன; எனினும், பெய்ஜிங்கில் பெரும்பாலான மக்கள் அதிகாரிகளின் ஆலோசனைகளை பின்பற்றி வீடுகளுக்குள் தங்கியதால், உயிரிழப்புகள் நிகழவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.