நாங்கள் அரசாங்கத்தை பொறுப்பேற்ற நேரத்தில் நாட்டின் பொருளாதார நிலைமை எவ்வளவு மோசமாக இருந்தது என்பதை நீங்கள் நன்றாக நினைவில் வைத்திருக்க வேண்டும். சர்வதேச ரீதியில் ‘வங்குரோத்தான நாடு’ என இலங்கை அறிவிக்கப்பட்டிருந்தது.
பல ஆண்டுகளாக நாட்டில் எந்தவித பொருளாதார வளர்ச்சியும் இல்லை. கடன்களின் சுமை நாட்டை நசுக்கியது. சுற்றுலா துறை முற்றிலும் வீழ்ச்சி அடைந்தது. அரசாங்கத்தில் நிலவும் ஊழல் காரணமாக வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நாட்டில் முதலீடு செய்ய விரும்பவில்லை.
இன்றோ, அந்த நிலையிலிருந்து நாட்டை மீட்டுள்ளோம். இலங்கையின் வங்குரோத்து அடையாளத்தை நீக்க எமக்கு வாய்ப்பு கிடைத்துவிட்டது எனத் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாணத்தில் அடிப்படை வசதிகள் தொடர்பான பல்லாயிரம் சிக்கல்கள் உள்ளன. வீதிகள், குடிநீர், விவசாயம், வேலைவாய்ப்பு, கல்வி, சுகாதாரம் என அனைத்து துறைகளிலும் சிக்கல்கள் தொடர்கின்றன.
இந்த பிரச்சனைகளின் பெரும்பாலானவை உங்களது பிரதேசங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் உள்ளூர் மற்றும் மாகாண சபைகளால் தீர்க்கப்பட வேண்டியவை. ஆனால் அந்த வேலைகள் முறையாக நடைபெறவில்லை.
யுத்தத்தால் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் பிரச்சனைகள் ஏற்பட்டன என கூறப்பட்டது. ஆனால் யுத்தம் முடிந்து 16 ஆண்டுகள் ஆகிவிட்டாலும் மக்கள் வாழ்க்கையில் என்ன மாற்றம் வந்திருக்கிறது? உண்மையில் யாரும் தங்கள் வாழ்வை மேம்படுத்த முடியவில்லை.
மத்திய அரசு, மாகாண நிர்வாக அமைப்புகளுக்காக நிதி ஒதுக்குகிறது. ஆனால் அந்த நிதிகளை சரியான திட்டங்களுக்கு, வெளிப்படையாக செலவழிக்க திறமையான ஒரு நல்ல மேலாண்மை முறைமை தேவைப்படுகிறது.
மே 6 ஆம் திகதி உங்களது கிராம வளர்ச்சிக்காகவும், உங்கள் வாழ்வை மேம்படுத்தவும் உங்கள் அருகிலுள்ள உள்ளூர் ஆட்சியை தேர்ந்தெடுக்கும் தீர்மான ஆற்றல் உங்களுக்கு இருக்கிறது. ஊழல் மற்றும் மோசடிகளின்றி மக்களின் சேவைக்கு அர்ப்பணிக்கும் பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்காக உங்களது வாக்கை பயன்படுத்துங்கள்.
நாட்டின் வீழ்ச்சி நிலையிலிருந்து மீண்டு, பொருளாதார சவால்களை கடந்து முன்னேறுவதற்காக அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. எல்லாமே இன்னும் விரைவில் சீராக மாறவில்லை என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். பொருட்களின் விலை இன்னும் குறையவில்லை. ஆனால் அரசாங்கம் அந்த மாற்றங்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. அதன் பலன்கள் எதிர்காலத்தில் மக்களுக்கு கிடைக்கும்.
தற்போதைய வரவு செலவுத்திட்டத்தின் கீழ் அரசு, அரசுத்துறை ஊழியர்களின் அடிப்படை சம்பளங்களை உயர்த்த நடவடிக்கை எடுத்துள்ளது. அரசாங்க ஊழியர்கள் மக்களுக்காக கடமையாற்ற வேண்டும். மக்களின் அரசு போலவே மக்களின் சேவை அமைப்பும் உருவாக வேண்டும்.
அதற்காக நாட்டில் சமாதானத்தை கட்டியெழுப்ப அரசு முழுமையாக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது என பிரதமர் ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
இந்த கூட்டங்களில் மீன்வள அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் பல பாராளுமன்ற உறுப்பினர்களும், உள்ளூர் அதிகாரிகளும், வடக்கு மாகாண மக்களும் கலந்துகொண்டனர்.