தாம் உயிருடன் இல்லாத காலத்திலும் ஒரே சிங்கக் கொடியின் கீழ் இந்த நாடு இருக்க வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் வெற்றிகொள்ளப்பட்டு 16 ஆண்டுகள் பூர்த்தியாவதனை முன்னிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
பிரிவினைவாத பயங்கரவாதிகளின் பிடியிலிருந்து நாடு முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் ஒவ்வொரு அங்குல நிலத்திலும் இப்போது நடைமுறைக்கு வரும் சட்டங்கள் உயர் பாராளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டவை மட்டுமேயாகும் என குறிப்பிட்டுள்ளார்.
2009 மே 19ஆம் திகதி, சிங்கத்தின் கொடியின் கீழ் ஒன்றிணைக்கப்பட்ட பெருமைமிக்க ஒற்றுமையான நாட்டின் ஜனாதிபதியாகவும், இராணுவத் தளபதியாகவும், மக்களின் பிரதிநிதித்துவம் என்பதற்கான உயர் பாராளுமன்றத்தின் நான்காவது அமர்வின் ஆரம்ப உரையில் நான் கூறிய மேற்கண்ட வாசகம் என்னால் மறக்க முடியாத ஒன்று என அவர் தெரிவித்துள்ளார்.
உலகின் மிகவும் கொடூரமான பயங்கரவாத அமைப்பான தமிழீழ விடுலைப் புலிகளிடமிருந்து நாட்டை மீட்டெடுக்கும் கனவு நனவாக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கம் தமிழ் பொதுமக்களை கொன்றொழித்ததாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களை அப்போதைய ஜனாதிபதி மற்றும் படைத்தளபதி என்ற வகையில் நிராகரிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
அண்மையில் கனடாவின் பிரம்டன் நகர முதல்வரினால் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை நிராகரிப்பதாக தெரிவித்துள்ளார்.
உலகின் மிகவும் ஒழுக்கமானதும் மனிதாபிமானதுமான இராணுவப்படையினர் இலங்கை படையினர் எனவும் மனிதாபிமான மீட்புப் பணிகளே மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இலங்கைப் படையினர் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மனித உரிமைகளை மீறவோ அல்லது போர்க் குற்றச் செயல்களில் ஈடுபடவோ இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2008ம் ஆண்டில் அமெரிக்க எப்.பி.ஐ புலனாய்வுப் பிரிவினால் உலகின் மிகவும் ஆபத்தான பயங்கரவாத அமைப்புக்களில் ஒன்றாக அடையாளப்படுத்தப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளை இராணுவம் இல்லாதொழித்ததாகத் தெரிவித்துள்ளார்.
பல்வேறு வழிகளில் இந்த நாட்டுக்காக அர்ப்பணிப்புக்களை செய்த அனைத்து படைவீரர்களையும் நன்றியுடன் நினைவுகூறுவதாக மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.