நியூயார்க் நகரத்தில், மெக்சிகோ கடற்படையின் Cuauhtémoc எனும் பயணக் கப்பல் ப்ரூக்லின் பாலத்தில் மோதியதில் குறைந்தது இருவர் உயிரிழந்துள்ளதாக நகர மேயர் எரிக் அடம்ஸ் அறிவித்துள்ளார்.
“கப்பலில் இருந்த 277 பேரில், 19 பேர் காயமடைந்துள்ளனர்.
அவர்களில் 2 பேர் கடுமையான நிலையில் உள்ளனர், மேலும் 2 பேர் தங்களது காயங்களால் உயிரிழந்துள்ளனர்,” என மேயர் அடம்ஸ் தனது X (முன்னாள் ட்விட்டர்) பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
உயிரிழந்த இருவரும் கப்பலின் மாடங்களில் இருந்து விழுந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இறந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
கப்பலில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு (mechanical issues) தான் இந்த விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் எனத் தீவிரமாக சந்தேகிக்கின்றனர்.
இருப்பினும், இது தொடர்பான தகவல்கள் தற்போது தற்காலிக நிலை என்பதையும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Cuauhtémoc என்பது மெக்ஸிகோ கடற்படையின் பயிற்சி மற்றும் சஞ்சார கப்பலாகும்.
இது உலகின் பல துறைமுகங்களுக்கு விஜயம் செய்வது வழக்கம். ஆனால் இந்தப் பயணம் துயரமாக முடிவுற்றது.
சம்பவம் குறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
இதேவேளை, நியூயார்க் நகரத்தின் ஹார்பரில் மெக்ஸிகோ கடற்படையின் Cuauhtémoc பயிற்சி கப்பல் ப்ரூக்லின் பாலத்தில் மோதியதில் இரு படை உறுப்பினர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, மெக்ஸிகோ நாட்டின் புதிய ஜனாதிபதி கிளாவ்டியா ஷெய்ன்போம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.
“நியூயார்க் துறைமுகத்தில் நடந்த துயரமான விபத்தில் உயிரிழந்த Cuauhtémoc பயிற்சி கப்பலின் இரண்டு குழுவினரின் இழப்பால் நாம் ஆழ்ந்த துக்கத்தில் உள்ளோம். அவர்களின் குடும்பங்களுக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபமும் ஆதரவும்,” என ஷெய்ன்போம் ஞாயிறு அதிகாலை X தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளார்.