விமானியின்றி ஜெர்மனியிலிருந்து ஸ்பெய்ன் நோக்கிப் பயணம் செய்த விமானம் தொடர்பிலான தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த, 2024 பெப்ரவரி 17ஆம் திகதி ஜெர்மனியின் பிராங்போர்டிலிருந்து ஸ்பெயினின் செவில்லாவுக்கு சென்ற லுஃப்தான்ஸா விமானம் (Lufthansa) ஒரு அதிர்ச்சிகரமான தருணத்தை எதிர்கொண்டது.
விமானத்தின் துணை விமானி (copilot) தனியாகக் காக்பிட்டில் இருந்தபோது மயங்கி விழுந்ததால், 10 நிமிடங்களுக்கு விமானம் காக்பிட் கண்காணிப்பின்றி பயணித்தது என ஸ்பெயின் விமான விபத்து விசாரணை ஆணையம் (CIAIAC) தெரிவித்துள்ளது.
அந்த நேரத்தில் 199 பயணிகள் மற்றும் 6 பணியாளர்கள் இருந்த A321 வகை ஏர்பஸ் விமானத்தில், முதன்மை விமானி (captain) கழிவறைக்குச் சென்றபோது, துணை விமானி திடீரென மயங்கி விழுந்தார்.
விமானம் ஆட்டோ பயலட் (autopilot) முறையில் நிலைத்திருக்கும் வகையில் பயணித்தாலும், மயங்கிய துணை விமானியின் உடலியல் இயக்கங்களால் விமான கட்டுப்பாட்டில் சில தவறான செயல்கள் நிகழ்ந்ததாகச் CIAIAC கூறுகிறது.
அவ்வேளை காக்பிட் ஒலி பதிவியில், துணை விமானியின் திடீர் உடல் நிலை மாற்றத்தை ஒத்த ஒலிகள் பதிவாகியிருந்தன.
எயர் டிராஃபிக் கட்டுப்பாட்டாளர்கள் மூன்று முறை தொடர்பு கொள்ள முயற்சி செய்தும் பதில் கிடைக்கவில்லை. பின் முதன்மை விமானி காக்பிட்டுக்குத் திரும்பி, வழக்கமான குறியீட்டைக் கொண்டு திறக்க முயன்றார். 5 முறை முயற்சி, பின்னர் ஒருவரின் இன்டர்காம் அழைப்பிற்கும் பதிலளிக்கவில்லை.
இறுதியாக அவசர குறியீடு பயன்படுத்தி கதவைத் திறந்த விமானி, உடனே விமான கட்டுப்பாட்டைப் பெற்றார்.
மயங்கிய துணை விமானிக்கு விமான பணியாளர்கள் மற்றும் விமானத்தில் பயணித்த மருத்துவர் ஒருவரால் முதலுதவி வழங்கப்பட்டது.
பின்னர் அவர் உணர்வு திரும்பினார் மற்றும் அந்தத் தருணத்தைச் சிறிது நினைவில் வைத்திருந்ததாகக் கூறினார்.
அந்த சம்பவத்துக்குப் பிறகு, விமானி விமானத்தை ஸ்பெயினின் மாட்ரிட் பராஜாஸ் (Madrid-Barajas) விமான நிலையத்திற்கு திருப்பி, சுமார் 20 நிமிடங்களில் பாதுகாப்பாக தரையிறக்கினார். துணை விமானி மருத்துவமனையில் சில மணி நேரங்கள் அனுமதிக்கபட்டார்.
விசாரணையின் படி, இந்த மயக்கம் முன்கூட்டியே இருந்த நரம்பியல் (neurological) சிக்கலின் விளைவாக நிகழ்ந்தது. ஆனால், விமான மருத்துவ சோதனையில் இது கண்டறியப்படவில்லை. அதன் பின், துணை விமானியின் மருத்துவ சான்றிதழ் இடைநிறுத்தப்பட்டது.
CIAIAC கூறுவதாவது, விமானத்தில் விமானிகள் மயங்குவது போன்ற விஷயங்கள் அபூர்வமாகவே நிகழும். இருப்பினும் 2019 முதல் 2024 வரை ஐரோப்பிய கமிஷன் தரவுத்தளத்தில் 287 விமானி மயக்கம் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
அதேபோல், அமெரிக்காவின் FAA (Federal Aviation Administration) 2004-ஆம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையின்படி, 1993-1998 காலக்கட்டத்தில் 39 மயக்கம் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.
அவர்கள் ஸ்பெயின் அதிகாரிகளுடன் முழுமையாக ஒத்துழைத்துள்ளனர். நிறுவனத்தின் உள்நாட்டு விமான பாதுகாப்பு குழுவும் தனியான விசாரணை நடத்தியுள்ளது. மேலதிகமாக கருத்து கூற முடியாது என லுஃப்தான்ஸா நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.