அமெரிக்கா இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைகளில் “நேரடி பங்கு வகிக்கிறது” என ஈரான் அதிபர் மஸூத் பெஸெஷ்கியான் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான தகவலை ஈரானின் அரசு ஊடகம் பார்ஸ் Fars வெளியிட்டது.
அமெரிக்கத் தூதுவர் ஸ்டீவ் விட்ட்காஃப், நமது வெளியுறவுத் துறை அமைச்சரிடம், ‘அமெரிக்க அனுமதி இல்லாமல் இஸ்ரேல் எதுவும் செய்ய முடியாது’ என கூறியுள்ளார் எனவும், இதுவே இஸ்ரேலின் நடவடிக்கைகள் அமெரிக்க அங்கீகாரத்துடன் நடைபெறுகின்றன என்பதற்கான சாட்சியாகும என ஈரான் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களில் மறைக்க முயற்சிக்கும்போதிலும், இஸ்ரேலின் தற்போதைய தாக்குதல்கள் அமெரிக்காவின் நேரடி ஆதரவுடன் நடைபெறுகின்றன என குற்றம்சாட்டியுள்ளார்.
ஈரான் எப்போதும் போர் அல்லது மோதலை நாடாத நாடாக இருந்தாலும், தாக்குதல்கள் தொடர்ந்தால் “கடுமையான பதிலடி” கொடுப்போம் எனவும் அதிபர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை, அமெரிக்காவின் அதிபர் டொனால்ட் டிரம்ப், சர்வதேச ஊடகமொன்றுக்கு அளித்த தொலைபேசி நேர்காணலில், அமெரிக்கா இஸ்ரேல்-ஈரான் மோதலில் ஈடுபடும் வாய்ப்பு இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
“நாம் தற்போது நேரடியாக ஈடுபட்டிருக்கவில்லை. ஆனால் எதிர்காலத்தில் அதற்கான சாத்தியமுண்டு” என டிரம்ப் கூறியுள்ளார்.
ஈரானுடன் தொடரும் அணு ஒப்பந்த பேச்சுவார்த்தைகள் இவ்வேளை ஓமானில் நடைபெற இருந்தன. ஆனால் அவை தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளன. எனினும், “ஈரானியர்கள் பேச விரும்புகின்றனர். இந்த மோதல்கள், ஒப்பந்தம் விரைவில் முடிவடையவும் வழிவகுக்கலாம்” எனவும் டிரம்ப் நம்பிக்கை வெளியிட்டார்.
மேலும், ரஷ்ய அதிபர் புதினை ஒரு நடுநிலை நபராக கருத தயார் எனவும், புதின் தனிப்பட்ட முறையில் அழைத்து, இதுபற்றி நீண்ட நேரம் பேசினார் என்றும் டிரம்ப் கூயுள்ளார்.