இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே தாக்குதல்கள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
“எமது பாதுகாப்பை வருங்காலத்திற்கும் வலுப்படுத்தவே இந்த நடவடிக்கைகள் தொடரும்” என இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளின் (IDF) தலைமை தளபதி ஐயல் ஸமீர் தெரிவித்துள்ளார்.
ஞாயிறு இரவு ஈரான் “Operation True Promise 3” என்ற பெயரில் இஸ்ரேலை நோக்கி புதிய ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் கடும் தாக்குதல் நடத்தியது. இதில் பல நூறு வகையான பாலிஸ்டிக் ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டதாக ஈரானின் மேர் நியூஸ் தெரிவித்துள்ளது.
குடியிருப்பு பகுதிகள் மற்றும் முக்கிய உள்கட்டமைப்புகள் இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ஈரான் மக்கள், இஸ்ரேலின் முக்கிய இராணுவ, விஞ்ஞான வளாகங்களுக்கு அருகிலுள்ள பகுதிகளில் இருந்து வெளியேற அறிவுறுத்தப்பட்டனர்.
இதேபோல், இஸ்ரேலும் முன்னதாக ஈரானியர்கள் ஆயுத உற்பத்தி மையங்களுக்கு அருகிலிருந்து இடம்பெயர எச்சரித்தது. இது எதிர்வரும் தாக்குதல்களுக்கு முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது.
மேற்குப் பகுதிகள் மற்றும் மத்திய ஈரானில் உள்ள நிலத்தடி ஏவுகணை நிலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. டெஹ்ரானிலும் இராணுவ இலக்குகள் தாக்கப்பட்டன.
ஈரான் வெளியுறவுத்துறை கட்டிடமும் தாக்கத்தால் சேதமடைந்தது. இதில் பலர் காயமடைந்தனர் என்று ஈரான் துணை வெளியுறவுத்துறை அமைச்சர் சயீத் கத்தீப்சதே தெரிவித்தார்.
ஈரானின் புரட்சிகர காவல்படை (Revolutionary Guards) உளவுத்துறைத் தலைவர் மொஹம்மட் காசெமி மற்றும் அவரது துணைத் தலைவர் இன்றைய தாக்குதல்களில் கொல்லப்பட்டனர்.
ஈரான் உயர் தலைவர் அயத்துல்லா அலி கமெனியை கொலை செய்ய இஸ்ரேல் திட்டமிட்டதாக கூறப்பட்ட செய்திகளை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு மற்றும் அவரது பேச்சாளரும் இந்தத் திட்டத்தை முற்றிலும் நிராகரித்துள்ளனர்.
இந்த தாக்குதல்களில் ஈரானில் குறைந்தது 224 பேர் உயிரிழந்து, 1,277 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பெரும்பாலானோர் பொதுமக்கள் என ஈரான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலில் 14 பேர் உயிரிழந்துள்ளதுடன், 380 பேர் காயமடைந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த இழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரித்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
ஹைஃபா நகரிலும், தெற்கிலுள்ள ஜாவ்தியெல் பகுதியில் உள்ள கட்டடங்கள் தாக்கப்பட்டதாக இஸ்ரேல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
துருக்கி அதிபர் ரெசப் தயிப் எர்டொகான் உட்பட பல உலகத் தலைவர்கள், இரு நாடுகளும் உடனடி பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.