13.3 C
Switzerland
Sunday, July 20, 2025

ஏர் இந்தியா விமான விபத்து: கருப்பு பெட்டியில் உள்ள முக்கிய தரவுகள் மீட்பு

Must Read

பிரிட்டனின் லண்டனை நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் கடந்த வியாழக்கிழமை அஹமதாபாத்தில் இருந்து புறப்பட்ட சில நிமிடங்களுக்குள் விபத்துக்குள்ளானது.

போயிங் 787-8 ட்ரிம்லைனர் Boeing 787-8 Dreamliner வகை இந்த விமானத்தில் பயணம் செய்தவர்கள் உள்ளிட்ட 270 பேர்  விபத்தில் உயிரிழந்தனர்.

விமானத்தின் கொக்பிட் குரல் பதிவு கருவி “Cockpit Voice Recorder (CVR)”, அதாவது விமானி மற்றும் துணை விமானியின்  உரையாடல்கள், எச்சரிக்கை ஒலிகள், மற்றும் சுற்றியுள்ள சத்தங்களை பதிவு செய்பவை இன்று மீட்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர், விமானத்தின் தகவல் பதிவுக் கருவி “Flight Data Recorder (FDR)”, அதாவது பறப்பின் வேகம், உயரம், என்ஜின் செயல்திறன் போன்ற தரவுகளை பதிவு செய்யும் கருவியும் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டது.

இவ்விரண்டும் சேர்ந்து, “கருப்பு பெட்டி” எனப்படும் விமானத்தின் முக்கியமான விசாரணை கருவிகளாகும். உண்மையில், இவை ஒளிரும் சிவப்பு-ஆரஞ்சு நிறத்தில் இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த பயங்கர விபத்தின் விசாரணைக்கு இந்திய விமான விபத்து விசாரணை பிரிவு (AAIB) தலைமை வகிக்கிறது.

அமெரிக்கா மற்றும் பிரிட்டனில் இருந்து சென்ற நிபுணர்கள் குழு இதில் ஒத்துழைக்கின்றனர்.

அமெரிக்க தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் (NTSB) அதிகாரிகள், விபத்து நடந்த இடத்தைக் ஞாயிறன்று நேரில் பார்வையிட்டனர். இந்த விமானம் அமெரிக்காவால் தயாரிக்கப்பட்டதால், சர்வதேச ஒப்பந்தங்களுக்கு ஏற்ப, NTSB தனித்தனி விசாரணையையும் மேற்கொண்டு வருகிறது.

Boeing மற்றும் FAA (Federal Aviation Administration) அதிகாரிகள் மற்றும் வல்லுநர்களும் இந்நிகழ்வை நேரில் ஆய்வு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய அரசு அமைத்துள்ள அதிகாரிகள் குழு, விபத்து காரணங்களை ஆய்வு செய்ய திங்கள்கிழமை முதல் கூட்டங்கள் நடத்தத் திட்டமிட்டுள்ளது. மூன்று மாதங்களில் இடைக்கால அறிக்கையை சமர்ப்பிக்குமென்றும், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்களைத் தவிர்க்க புதிய நடைமுறை வழிகாட்டுதல்கள் (SOPs) முன்மொழியுமென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

விபத்து நடந்த சர்தார் வல்லபாய் பட்டேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட குறைந்தது ஒரு நிமிடத்துக்குள், விமானம் பி.ஜே மருத்துவக் கல்லூரி மற்றும் சிவில் மருத்துவமனை வளாகத்தில் உள்ள மருத்துவர்களுக்கான குடியிருப்புத் தொகுதிக்கு மோதி நொறுங்கியது.

விமானத்தில் இருந்த 242 பயணிகள் மற்றும் குழு உறுப்பினர்களில் ஒருவரைத் தவிர அனைவரும் உயிரிழந்துள்ளனர். மேலும், தரையில் எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர் என்பது இன்னும் உறுதியாக தெரியவில்லை. DNA பரிசோதனையின் மூலம் சடலங்களை அடையாளம் காணும் பணிகள் தொடர்கின்றன.

அஹமதாபாத் சிவில் மருத்துவமனையின் டாக்டர் ராஜ்நீஷ் படேல், தற்போது வரை 270 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன என்றும், அதில் 90க்கும் மேற்பட்டோர் DNA மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார். இவர்களில் 47 உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இறந்தவர்களில், முன்னாள் குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபாணி உடலும் அடையாளம் காணப்பட்டுள்ளது. அவருக்கான அரசாங்க மரியாதை உடைய இறுதி ஊர்வலம் இன்று ராஜ்கோட் நகரில் நடைபெற உள்ளது.

இன்னும் பல குடும்பங்கள், தங்கள் உறவுகளின் உடல்களை எதிர்பார்த்துக் காத்திருப்பது மிகுந்த வேதனைக்குரிய அனுபவமாக உள்ளது. உடல்கள் தீக்காயம் அடைந்த நிலையில் இருப்பதால், அடையாளம் காணும் பணிகள் மிகவும் சிக்கலாகவும் மெதுவாகவும் நடைபெற்று வருகின்றன.

MORE ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LATEST ARTICLES