இலங்கையில் கடந்த காலங்களில் ஆட்சியில் இருந்த அரசாங்க முக்கியஸ்தர்கள் பல்வேறு முறை கேடுகளிலும் மோசடிகளிலும் ஈடுபட்டுடமை அம்பலமாகி வருகின்றது.
பல்வேறு அரசியல் பிரபலங்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதுடன் சிலருக்கு எதிராக விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில் கடந்த கால அரசாங்கங்களில் முக்கிய பதவிகளை வகித்து வந்த சுமார் 28 அரசியல்வாதிகளுக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
சட்டவிரோதமான முறையில் சொத்துக்களை குவித்ததாக இந்த அரசியல் பிரபலங்களுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட அரசியல் பிரபலங்களைப் போன்றே முன்னாள் ராணுவ தளபதி சவேந்திர சில்வா போன்ற அரச உயர் பதவிகளை வகித்த அதிகாரிகளும் இந்த விசாரணைப் பட்டியலில் உள்ளடங்குகின்றனர்.
இந்த நபர்கள் பாரிய அளவில் சொத்துக்களை குவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ராசமாணிக்கம் சாணக்கியன், வடிவேல் சுரேஷ் போன்ற தமிழ் அரசியல்வாதிகளின் பெயர்களும் இந்த பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கடந்த அரசாங்கங்களில் முக்கிய அமைச்சுப் பதவிகளை வகித்து வந்த கெஹலிய ரம்புக்வெல்ல தொடர்பில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
சுகாதார அமைச்சராக பதவி வகித்த காலத்தில் இறக்குமதி செய்யப்பட்ட மருந்து வகைகள் போலியானவை என்பது நிரூபணம் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பில் விசாரணை அறிக்கை ஒன்று நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
ஹியூமன் இமினோகுளோபின் என்ற ஒரு மருந்து வகையும் புற்று நோய்க்கு பயன்படுத்தப்படும் மற்றுமொரு மருந்து வகையும் முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் காலத்தில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
இந்த மருந்து வகைகளுக்காக சுமார் 1444 லட்சம் ரூபா பணம் அரசாங்கத்தினால் செலவழிக்கப்பட்டுள்ளது.
எனினும் இந்த மருந்து வகைகள் போலியானவை என்பது கண்டறியப்பட்டுள்ளது.
உலக சுகாதார ஸ்தாபனத்தின் அங்கீகாரம் பெற்ற ஜெர்மனிய ஆய்வுக்கூடம் ஒன்றில் இந்த இரண்டு மருந்து வகைகளும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
இந்த ஆய்வின் போது குறித்த மருந்து வகைகளில் மனித உடலுக்கு தீங்கிழைக்கக் கூடிய பாக்டீரியா வகையும் உப்பும் காணப்பட்டமை கண்டறியப்பட்டுள்ளது.
அப்பாவி பொதுமக்களை ஏமாற்றி மருந்துக்கு பதிலாக உயிராபத்து ஏற்படுத்தக்கூடிய பொருட்களை கலந்த மருந்து வகைகளை கும்பல் இறக்குமதி செய்துள்ளமை வெளிச்சமாகியுள்ளது.
இந்த குற்றச்செயலுடன் தொடர்புடைய 11 பேர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறான குற்றச்சாட்டுடன் தொடர்புடைய கெஹலிய ரம்புக்வெல்லவிற்கு அப்போதைய எதிர்க்கட்சிகளினால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் ரணில் தலைமையிலான அரசாங்கத்தினால் முறியடிக்கப்பட்டது.
இவ்வாறு குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களை அப்போதைய அரசாங்கங்கள் தொடர்ச்சியாக காப்பாற்றி வந்தமை குறிப்பிடத்தக்கது.
எவ்வாறு எனினும் தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கடந்த காலங்களில் இடம்பெற்ற பாரிய முறைகேடுகள், மோசடிகள், நிதி குற்றச்சாட்டுகள் தொடர்பிலான விசாரணைகளை தீவிர படுத்தியுள்ளது.
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் அவரது குடும்பத்தினர் நிதி சலவையில் ஈடுபட்டதாகவும் குற்றம் சுமத்தி அவர்கள் அண்மையில் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே முன்னால் அமைச்சர்களான மஹிந்தானந்த அலுத்கமகே மற்றும் நளின் பெர்ணான்டோ ஆகிய இருவருக்கு எதிராகவும் 25 மற்றும் 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கரம் மற்றும் தாம் போர்ட் இறக்குமதியில் பாரிய அளவில் மோசடி செய்த குற்றச்சாட்டில் இந்த தண்டனை விதிக்கப்பட்டு இருந்தது.
அந்த வகையில் எதிர்வரும் காலங்களில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் குடும்பத்தினர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரபலங்களுக்கு எதிராக தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர்களுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாகவும் அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகின்றது.
கடந்த அரசாங்கங்கள் அப்பாவின் நோயாளிகளின் மருந்திலும் மோசடி செய்து பணம் சம்பாதித்துள்ளமை மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது.