கடந்த மாதம் இந்தியாவில் 260 உயிர்களை காவுகொண்ட விமான விபத்து முதன்மை விமானியின் தவறினால் ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
எயார் இந்தியா விமான சேவையின் ஏனைய போயிங் Boeing விமானங்களில் எரிபொருள் கட்டுப்பாட்டு ஸ்விட்ச்களில் எந்தவொரு கோளாறும் இல்லை என நிறுவனத்தின் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
இதே நேரத்தில், இந்த விபத்து முதன்மை விமானியின் தவறால் ஏற்படுத்தப்பட்டிருக்கலாமா என்ற கோணத்தில் அமெரிக்க அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த விபத்து குறித்து கடந்த வாரம் வெளியிடப்பட்ட ஆரம்ப விசாரணை அறிக்கையின்படி, விமானம் அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டவுடன், இன்ஜின்களுக்கு செல்லும் எரிபொருள் ஸ்விட்ச்கள் ஒன்றன் பின் ஒன்று என அணைக்கப்பட்டுள்ளன என்பது தெரியவந்தது.
இதனால் எரிபொருள் இன்றி, இரு இன்ஜின்களும் செயலிழந்தன. சில விநாடிகளுக்குள், லண்டன் நோக்கிச் சென்ற விமானம் பறப்பை இழந்து தரையில் மோதி விபத்துக்குள்ளானது – இதில் 241 பயணிகள் மற்றும் தரையில் இருந்த 19 பேர் உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் Boeing நிறுவனத்துக்கெதிராக எந்த பரிந்துரையும் இந்திய விமானபாதுகாப்பு அதிகாரிகள் செய்யவில்லை. இருப்பினும், எரிபொருள் கட்டுப்பாட்டுச் ஸ்விட்ச்கள் சுட்டியால் தவறவிட முடியாத வகையில் பூட்டப்பட்டுள்ளதா என்பதைச் சோதிக்க எயார் இந்தியா Air India உத்தரவிட்டது.
Air India, தனது Boeing விமானங்களில் அனைத்தையும் ஆய்வு செய்து முடித்ததாகவும், எந்தவொரு கோளாறும் இல்லை என அதிகாரப்பூர்வமாக உறுதியளித்தது.
இந்நிலையில், முதன்மை விமானி சுமீத் சபர்வால், எரிபொருள் ஸ்விட்ச்களை அணைத்தார் என அமெரிக்க விசாரணை அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளதாக வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் ஊடகம் Wall Street Journal வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
விமானம் புறப்பட்ட போது, துணை விமானி கிளைவ் குண்டர், ஸ்விட்ச் ஏன் அணைக்கப்பட்டதென்று கேட்டுள்ளார் என்றும், அதற்கு சபர்வால் “தான் அணைக்கவில்லை” என்று பதிலளித்ததாகவும் பிளாக் பாக்ஸ் அல்லது கறுப்புப் பெட்டி ஆடியோ பதிவு மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
எனினும், இந்த விபத்து திட்டமிட்டு செய்யப்பட்டது என்பதை உறுதிப்படுத்தவில்லை. இது தவறுதலாகவோ அல்லது திட்டமிட்டோ செய்யப்பட்டது எனத் தாங்கள் தீர்மானிக்கவில்லை என்றும், குற்றவியல் விசாரணை அதிகாரிகளும் இதில் ஈடுபட வேண்டுமென அமெரிக்க அதிகாரிகள் கருதுவதாகத் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இந்திய விமானிகள் சங்கம், வோல்ஸ்ட்ரீட் ஜேர்னலின் இந்தக் குற்றச்சாட்டை “அடிப்படை ஆதாரமில்லாதது” என கடுமையாக கண்டித்துள்ளது.
மேலும், இந்திய விமான போக்குவரத்து அமைச்சர் கின்ஜாரப்பு நாயுடு, விசாரணை முடிவாகாத நிலையிலும் விரைவாக முடிவுக்கு வரக்கூடாது என தெரிவித்துள்ளார்.

