காசா நகரில் நடந்த இஸ்ரேல் விமானத் தாக்குதலில், ஹமாஸ் இராணுவப் பிரிவின் பேச்சாளர் அபூ உபைதா உயிரிழந்தார் என்று இஸ்ரேல் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த தாக்குதல் நடவடிக்கையை இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ச் புகழ்ந்து பாராட்டியுள்ளார்.
தாக்குதல் காசா நகரின் அல்-ரிமால் பகுதியிலுள்ள ஒரு குடியிருப்பு கட்டிடத்தை குறிவைத்து நடத்தப்பட்டது.
எனினும் ஹமாஸ் இயக்கம் இதுவரையில் உபைதாவின் மரணத்தை உறுதிப்படுத்தவில்லை. குழுவின் தகவலின்படி, தாக்குதலில் பல பொதுமக்கள் உயிரிழந்ததாகவும், குழந்தைகளும் காயமடைந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில், ஆறு மாடிக் கட்டிடத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் மாடிகள் மீது ஐந்து ஏவுகணைகள் இரு திசைகளில் இருந்து ஒரே நேரத்தில் தாக்கியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
உபைதா, 2023 அக்டோபர் 7 தாக்குதலுக்கு முன்பிருந்த ஹமாஸ் இராணுவத் தலைமையில் மீதமுள்ள சில முக்கிய நபர்களில் ஒருவர். எப்போதும் முகமூடி அணிந்து உரையாற்றிய அவர், ஹமாஸ் ஆதரவாளர்களுக்கு ஒரு சின்னமாக கருதப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

