சூடான் மேற்கு பகுதியிலுள்ள மார்ரா மலைப்பகுதியில் ஒரு கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் குறைந்தது 1,000 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சூடான் விடுதலை இயக்கம் இந்த விடயத்தை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
பல நாட்கள் நீடித்த கனமழைக்குப் பின் இந்த நிலச்சரிவு ஏற்பட்டதாக, அப்துல்வாஹித் முகமது நூர் தலைமையிலான அந்த இயக்கம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தார்பூர் பிராந்தியத்தில் அமைந்துள்ள அந்த பகுதியை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் இயக்கம், ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்க ஐக்கிய நாடுகள் மற்றும் சர்வதேச உதவி அமைப்புகள் தலையீடு செய்ய வேண்டும் எனக் கோரியுள்ளது.
அந்த கிராமம் இப்போது முற்றிலும் நிலத்துடன் கலந்துவிட்டது எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
வட தார்பூர் மாநிலத்தில், சூடான் இராணுவம் மற்றும் அதிரடி ஆதரவு படை (RSF) இடையேயான கடுமையான போரினால் அங்கிருந்த பொதுமக்கள் தப்பிச்சென்று மார்ரா மலைப்பகுதியில் தஞ்சம் அடைந்திருந்தனர். ஆனால் அங்கு உணவு, மருந்துகள் போதியளவில் இல்லை.
ஏற்கனவே இரண்டு ஆண்டுகளாக நீடித்து வரும் உள்நாட்டுப் போர், மக்களின் பாதிக்குமேல் பசியின் பேரழிவில் சிக்கச் செய்ததோடு, லட்சக்கணக்கானோர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற நேரிட்டுள்ளது.

