அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் லாஸ் ஏஞ்சல்ஸுக்கு தேசிய காவல்படையை அனுப்பியது சட்டவிரோதமானது என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநில நீதிமன்றம் இந்த தீர்ப்பினை வழங்கியுள்ளது.
இந்தத் தீர்ப்பு, டிரம்ப் தற்போது அமெரிக்காவின் பிற நகரங்களில் குற்றங்களை கட்டுப்படுத்தவும், குடியேற்றச் சட்டங்களை அமல்படுத்தவும் தேசிய காவல்படையை பயன்படுத்த முயற்சிக்கும் நிலையில் வெளியாகியுள்ளது.
குடியேற்றத் தடுப்பு நடவடிக்கைகளுக்கு எதிரான போராட்டங்கள் வெடித்ததைத் தொடர்ந்து, டிரம்ப் தேசிய காவல்படையை லாஸ் ஏஞ்சல்ஸுக்கு அனுப்பினார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கலிஃபோர்னியா மாநில ஆளுநர் கேவின் நியூசம், டிரம்ப் அமெரிக்க உள்நாட்டு விவகாரங்களில் இராணுவம் பயன்படுத்தப்படுவதைக் கட்டுப்படுத்தும் சட்டம் மீறியதாக வழக்கு தொடுத்தார்.
மாவட்ட நீதிபதி சார்லஸ் ப்ரேயர், டிரம்ப் எடுத்த நடவடிக்கை சட்டத்தைமீறுவதாகதீர்ப்பளித்தார்.
இந்தத் தீர்ப்பு செப்டம்பர் 12 வரை நிறுத்தி வைத்திருப்பதாகவும், டிரம்ப் மேல்முறையீடு செய்ய வாய்ப்பு உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய காவல்படை கைது, சோதனை, மக்கள் கூட்டக் கட்டுப்பாடு, கலவரக் கட்டுப்பாடு, ஆதாரச் சேகரிப்பு, விசாரணை அல்லது உளவு நடவடிக்கைகள் போன்றவற்றில் ஈடுபடக் கூடாது எனவும் அவர் உத்தரவிட்டார்.
இந்தத் தீர்ப்பு கலிஃபோர்னியாவுக்கு மட்டும் பொருந்தினாலும், டிரம்ப் பிற நகரங்களில் காவல்படையைப் பயன்படுத்தும் திட்டங்களுக்கு புதிய சட்ட சவால்களை ஏற்படுத்தக்கூடும் அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுளள்னர்.
“ஜனாதிபதி டிரம்ப் மற்றும் பாதுகாப்புத் துறைச் செயலாளர் பீட் ஹெக்செத், ஜனாதிபதி தலைவராகக் கொண்ட தேசிய காவல் போலீஸ் படை ஒன்றை உருவாக்கும் அபாயத்தில் உள்ளனர்” என நீதிபதி ப்ரேயர் தனது உத்தரவில் எச்சரித்துள்ளார்.
இது, லாஸ் ஏஞ்சல்ஸில் தேசிய காவல்படையை பயன்படுத்தியதற்காக நியூசம் தாக்கல் செய்த இரண்டாவது வழக்கு என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் வழக்கிலும் ப்ரேயர், நியூசத்தின் பக்கமாக தீர்ப்பு அளித்திருந்தார். எனினும் பின்னர் மேல் முறையீட்டு நீதிமன்றம் டிரம்பின் பக்கமாக தீர்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது.

