கழிப்பறையில் கைப்பேசி பயன்படுத்துவதனால் மூல வியாதி ஏற்படக்கூடிய அபாயம் அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
குடும்பத்திலிருந்து தனியாக இருக்கக்கூடிய இடமாக பலர் கழிப்பறையை கருதுகின்றனர்.
முன்பு இதுவே சிறு புத்தகங்கள், இதழ்கள் படிக்கும் இடமாக இருந்தது. ஆனால் இன்றைய காலத்தில் அவை மெல்ல மெல்ல கைபேசியில் முடிவில்லாமல் ஸ்க்ரோல் செய்வதற்கு மாறிவிட்டன.
இது வெறும் பழக்கமாக இல்லாமல், மூலவியாதி (Hemorrhoids) போன்ற சுகாதார பிரச்சினைகளையும் அதிகரிக்கிறது என ப்ளோஸ் வன் சஞ்சிகையில் வெளியிடப்பட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூலவியாதி என்றால் என்ன?
குடல் மற்றும் மலப்பாதையின் இறுதியில் உள்ள இரத்த நாளங்கள் வீங்கி, அதிக அழுத்தத்தால் பெரிதாகும்போது மூலவியாதி உருவாகிறது. இதனால் வலி, அரிப்பு, இரத்தப்போக்கு போன்ற தொந்தரவுகள் ஏற்படுகின்றன.
கைபேசி – கழிப்பறை பழக்க வழக்கங்கள்
ஆய்வில் பங்கேற்றவர்களில் 66% பேர் கழிப்பறையில் கைபேசியை பயன்படுத்துவதாக தெரிவித்தனர். இவர்களில் பெரும்பாலோர் 5 நிமிடங்களுக்கு மேல் கழிப்பறையில் அமர்ந்திருந்தனர்.
- 54% பேர் செய்திகளை வாசிக்கிறார்கள்
- 44% பேர் சமூக ஊடகங்களில் நேரம் செலவழிக்கிறார்கள்
ஆய்வாளர்கள் கண்டறிந்ததாவது: கழிப்பறையில் கைபேசி பயன்படுத்தும் பழக்கம் உள்ளவர்களுக்கு, பயன்படுத்தாதவர்களைக் காட்டிலும் 46% அதிக மூலவியாதி அபாயம் உள்ளது.
ஏன் இப்படி நடக்கிறது?
- கழிப்பறை ஆசனத்தில் நீண்ட நேரம் அமர்வதால் இரத்தம் குவிந்து அழுத்தம் அதிகரிக்கிறது.
- கைபேசி பார்ப்பதால் உடல் முன் குனிந்து அமர்வது வழக்கமாகிறது. இது மலவிடும் இயல்பான நிலையை கெடுக்கிறது.
- உட்காரும் கோணமும் (angle) இயல்பற்றதால், இரத்த நாளங்கள் வீங்கி பிரச்சினை மோசமடைகிறது.
இளம் தலைமுறையிலும் அதிகரிக்கும் அபாயம்
முன்பு மூலவியாதி அதிகமாக வயது முதிர்ந்தவர்களிடம் கண்டறியப்பட்டாலும், இப்போது இளம் வயதினரிடமும் அதிகரித்து வருகிறது. குறைந்த நார்ச்சத்து உணவு, உடல் பருமன், நீண்ட நேரம் கைபேசியில் மூழ்குவது போன்றவை முக்கிய காரணங்களாக மருத்துவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
தவிர்க்கும் வழிகள்
- கழிப்பறைக்கு கைபேசியை எடுத்துச் செல்லாமல் இருப்பது மிகச் சிறந்த தீர்வு.
- அதிகபட்சம் 3–5 நிமிடங்கள் மட்டுமே கழிப்பறையில் அமர வேண்டும்.
- நார்ச்சத்து நிறைந்த உணவு உட்கொள்ளவும், போதுமான தண்ணீர் குடிக்கவும்.
- சீரான உடற்பயிற்சி செய்யவும்.
“வாழ்க்கையில் பல விஷயங்களை மெதுவாகச் செய்யலாம், ஆனால் கழிப்பறையில் மெதுவாக இருக்கக் கூடாது என மருத்துவர் டிரிஷா பஸ்ரிச்சா கூறியுள்ளார்.

