குவைத் எயார்வேஸ் விமான சேவை நிறுவனம் எதிர்வரும் அக்டோபர் மாதம் 26ஆம் திகதி முதல் கொழும்பு நோக்கி வர்த்தக விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்க இருப்பதாக அறிவித்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை, புதன்கிழமை, வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வாரம் நான்கு முறை விமானங்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு, பயணிகளுக்கான ஒரு முக்கியமான சுற்றுலா இடமாக தொடர்ந்தும் உள்ளது என குவைத் எயார்வேஸ் கூறியுள்ளது.
பயணிகள் தேவைகளை பூர்த்தி செய்வதற்கும், உலகளாவிய பயண விருப்பங்களை அதிகரிப்பதற்குமான முயற்சியின் ஒரு பகுதியாக இச்சேவையை மீண்டும் தொடங்குவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
1953ஆம் ஆண்டு Kuwait National Airways Limited என்ற பெயரில் நிறுவப்பட்ட இந்த நிறுவனம், 1954 மார்ச் மாதத்தில் விமான சேவைகளை ஆரம்பித்தது.
1962ஆம் ஆண்டு, குவைத் அரசு முழுமையான உரிமையைப் பெற்றுக்கொண்டு, இதை நாட்டின் தேசிய விமான நிறுவனமாக மாற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.

