அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு எதிராக மற்றுமொரு நீதிமன்ற தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஹார்வர்ட் பல்கலைக்கழகம் மற்றும் டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்துக்கிடையே நீண்டநாள் நிலவி வந்த மோதலில், அமெரிக்க நீதிபதி அலிசன் புரோஸ் ஹார்வர்ட்டுக்கு சாதகமான தீர்ப்பளித்துள்ளார்.
அமெரிக்க அரசு ஹார்வர்ட்டின் ஆய்வுகளுக்காக ஒதுக்கப்பட்ட 2 பில்லியன் அமெரிக்க டாலர் நிதியை நிறுத்தியிருந்தது.
அதனை மீண்டும் வழங்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
டிரம்ப் நிர்வாகம் ஹார்வர்ட்டில் யூத விரோதம் நிலவி வருவதாகக் கூறி நிதியைத் தடுத்ததாக விளக்கம் அளித்திருந்தது.
ஆனால் அதனை நிராகரித்த நீதிபதி புரோஸ், “அரசு யூத விரோதத்தை ஒரு காரணமாக காட்டி, நாட்டின் முன்னணி பல்கலைக்கழகங்களை குறிவைத்து அரசியல் நோக்கத்துடன் தாக்கியது” என்று கண்டனம் தெரிவித்தார்.
இந்த முடிவு, கல்விச் சுதந்திரம் மற்றும் அறிவியல் ஆய்வுகளுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாக ஹார்வர்ட் தலைவர் ஆலன் கார்பர் தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில், டிரம்ப் நிர்வாகம் மேல்முறையீடு செய்யும் திட்டம் உள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
ஹார்வர்ட்டின் ஆய்வுகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதி பல முக்கிய திட்டங்களுக்குப் பயன்படுகின்றன. அதில், முன்னாள் ராணுவ வீரர்களின் தற்கொலை ஆபத்தை கண்டறியும் மாதிரி அமைப்புகள், நாசா விண்வெளி வீரர்களுக்கான கதிர்வீச்சு ஆய்வுகள், மற்றும் உயிரியல் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் திட்டங்கள் அடங்கும்.
இதேவேளை, கொலம்பியா, ப்ரவுன், யூ.சி.எல்.ஏ போன்ற பிற முன்னணி பல்கலைக்கழகங்கள் அரசின் அழுத்தத்துக்கு இணங்கி பல பில்லியன் டாலர் அபராதங்களை செலுத்தியுள்ளன. ஆனால் ஹார்வர்ட் மட்டும் நேரடியாக நீதிமன்றத்தில் டிரம்ப் நிர்வாகத்தை எதிர்த்து வெற்றி பெற்றுள்ளது.
இந்த தீர்ப்பால் ஹார்வர்ட்டின் நிதி நிலைமை தற்காலிகமாக பாதுகாப்பில் உள்ளதாகக் கருதப்படுகின்றது. எனினும், வெள்ளை மாளிகையின் மேல்முறையீடு காரணமாக எதிர்காலம் இன்னும் குழப்பத்திலேயே உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அண்மைய நாட்களாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் சில தீர்மானங்களை எதிர்த்து நீதிமன்றங்கள் அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

