போர்ச்சுக்கலின் தலைநகரம் லிஸ்பனில் பிரபலமான சுற்றுலா ஈர்ப்பிடமாக விளங்கும் 140 ஆண்டுகள் பழமையான ‘குளோரியா’ ஃப்யூனிகுலர் தடம் புரண்டதில் குறைந்தது 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் 18 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஐந்து பேரின் நிலை மிகக்கடுமையாக உள்ளது.
இந்த விபத்தில் வெளிநாட்டவர்களும் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் அவர்கள் எந்த நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.
லிஸ்பன் மேயர் கார்லோஸ் மோடாஸ் மருத்துவமனையில் காயமடைந்தவர்களை சந்தித்து, “இது நகரத்துக்கான மிகப் பெரிய துயரமான தருணம்” எனக் கூறினார்.
போர்ச்சுக்கல் அரசு வியாழக்கிழமை தேசிய துக்க நாளை அறிவித்துள்ளது.
நாட்டின் அதிபர் மார்சலோ ரிபெல்லோ டி சௌசா, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் மற்றும் ஒற்றுமையைத் தெரிவித்துள்ளார்.
கண் சாட்சிகள், ரயிலின் பிரேக் செயலிழந்ததால் அது கட்டுப்பாட்டை இழந்து வேகமாக சரிவான சாலையில் பாய்ந்து சென்று அருகிலிருந்த கட்டிடத்தில் மோதியதாக கூறினர்.
சிலர் சிக்கியிருந்த நிலையில் மீட்பு பணியாளர்கள் பல மணி நேரம் முயன்று அவர்களை மீட்டனர்.
சமூக வலைதளங்களில் வெளியான காட்சிகளில், பிரபலமான மஞ்சள் நிற வண்டி புரண்டு நொறுங்கிய நிலையில் காணப்பட்டது. புகை நிறைந்த பகுதியில் மக்கள் அச்சத்தில் ஓடிச் செல்லும் காட்சிகளும் பதிவாகியிருந்தன.

